செய்திகள்
திருப்பூரில் பனியன் நிறுவனம் 10சதவீத பணியாளர்களுடன் இயங்கியதை படத்தில் காணலாம்.

திருப்பூரில் ஏற்றுமதி பனியன் நிறுவனங்கள் இயக்கம்

Published On 2021-06-07 09:11 GMT   |   Update On 2021-06-07 10:32 GMT
10சதவீத பணியாளர்களுடன் திருப்பூரில் ஏற்றுமதி பனியன் நிறுவனங்கள் செயல்பட ஆரம்பித்தன. கொரோனா தடுப்பு விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறதா? என கண்காணிப்பு குழுவினர் அதிரடி ஆய்வில் ஈடுபட்டனர்.
திருப்பூர்:

தமிழக அரசின் புதிய ஊரடங்கு அறிவிப்புபடி திருப்பூரில் இன்று முதல் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்களும், அவை சார்ந்த ‘ஜாப் ஒர்க்‘ நிறுவனங்களும் 10 சதவீத தொழிலாளர்களுடன் இயங்க தொடங்கின. ஊரடங்கு காரணமாக  தமிழகத்தின் மற்ற மாவட்டங்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் சொந்தஊர்களுக்கு சென்றுள்ள நிலையில், உள்ளூரை சேர்ந்த பணியாளர்களை வைத்து  உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.

ஊரடங்கால் வெளி நாட்டு ஆர்டர்களை முடித்து கொடுக்க முடியாத நிலை ஏற்பட்ட நிலையில், இன்று முதல் உற்பத்தி தொடங்கியுள்ளதால் பின்னலாடை உற்பத்தியாளர்கள் சற்று மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஊரடங்கிற்கு முன்பு சில பனியன் நிறுவனங்கள் விதிகளை மீறி இயங்கின. இதனால் தொழிலாளர்கள் பலர் கொரோனா தொற்றுக்கு ஆளாகினர். அந்த நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. அது போன்ற நிலை ஏற்பட்டு விடக்கூடாது என்பதால் ஊரடங்கு விதிமுறைகள் சரிவர பின்பற்றப்பட வேண்டும் என பனியன்  நிறுவன ங்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
 
இதைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் அமைத்துள்ள குழுவினர் இன்று காலை முதல் ஒவ்வொரு நிறுவனங்களுக்கும் சென்று ஆய்வில் ஈடுபட்டனர். கொரோனா தற்காப்பு விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படுகிறதா? 10சதவீதம் மட்டும் பணியாளர்கள் உள்ளனரா? என்றுஆய்வில் ஈடுபட்டனர். சில நிறுவனங்கள் விதிகளை மீறி தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் கூடுதல் பணி யாளர்களை வைத்து உற்பத்தியில் ஈடுபட்டன. அந்த நிறுவனங்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தொழிலாளர்கள் உரிய ஆவணங்களுடன் நிறுவனத்திற்கு வந்தனரா? என்று  ஆவணங்களை  வாங்கி பார்த்து ஆய்வு செய்தனர். கடந்த 10-ந்தேதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டபோது  குறிப்பிட்ட நிறுவனங்கள் மட்டும் திருப்பூரில் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு  இருந்தது. ஆனால் அனுமதி அளிக்கப்படாத பனியன் நிறுவன தொழிலாளர்கள் தங்களது நிறுவன அடையாள அட்டையுடன் சாலைகளில் உலா வந்தனர்.

போலீசாரின் சோதனையில் இது கண்டுபிடிக்கப்பட்டு அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இப்போது 10சதவீத பணியாளர்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் முன்பு போல அடையாள அட்டையுடன் பனியன் நிறுவன தொழிலாளர்கள் சாலைகளில் உலா வருகிறார்களா? என்று போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.


திருப்பூரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ள காட்சி.

திருப்பூர் பழைய பஸ் நிலையம் , புதிய பஸ் நிலைய பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை  நடைபெறுகிறது. பனியன் நிறுவனம் வழங்கிய உரிய ஆவணங்களை காண்பித்த  தொழிலாளர்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர். ஆவணங்கள் இல்லாதவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இதனிடையே தொற்று அபாயம் உள்ளதால் திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களை இயக்க தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் (சைமா) எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அச்சங்கத்தின் துணை தலைவர் கோவிந்தப்பன் கூறுகையில், திருப்பூரில் உள்ள ஒரு பெரிய ஏற்றுமதி நிறுவனத்தின் உரிமையாளர் கொரோனா தொற்று பாதித்து சிகிச்சை பெற்றார். பல லட்சம் செலவழித்தும் பயனில்லை. 

சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.முக கவசம் அணிவதில், தொழிலாளர்கள் அலட்சியம் காட்டுகின்றனர். தொடர்ந்து பல மணிநேரம் அணிவதை அசவுகரியமாக கருதுகின்றனர். சிறிது நேரத்தில் முக கவசத்தை கழற்றி விடுகின்றனர். எனவே  கொரோனா பரவல் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.எப்போது வேண்டுமானாலும் பணம் சம்பாதித்து கொள்ளலாம். இது உயிர் பிரச்சினை. அடுத்த ஒரு வாரத்துக்கு அனைத்து ஆடை உற்பத்தி நிறுவனங்களும், இயக்கத்தை நிறுத்திவைக்கவேண்டும். இதனால் எவ்வித பிரச்சினையும் ஏற்படாது. 

பின்னலாடை துறையினரே தயவு செய்து நிறுவனங்களை இயக்காதீர். நிறுவனத்தை இயக்கி ஒருவேளை தொற்று ஏற்பட்டு, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால், அந்நிறுவனத்துக்கு சைமா சங்கம் எவ்வித ஆதரவும் அளிக்காது என்றார். இதன் காரணமாக அச்சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் இன்று பனியன் நிறுவனங்களை திறக்கவில்லை.
Tags:    

Similar News