செய்திகள்
அன்புமணி ராமதாசுக்கு மாநில துணை பொதுச் செயலாளர் சகாதேவன் சால்வை அணிவித்தார்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்துப் போராட்டம் நடத்துவோம்- அன்புமணி பேச்சு

Published On 2019-07-28 09:58 GMT   |   Update On 2019-07-28 09:58 GMT
ஹைட்ரோ கார்பன் திட்டம் கொண்டு வந்தால் அதை எதிர்த்து போராட்டம் நடத்துவோம். கூட்டணியை பற்றி எங்களுக்கு கவலை கிடையாது என்று அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார்.

சென்னை:

பா.ம.க. நிறுவனர் ராமதாசின் முத்துவிழா பொதுக்கூட்டம் தி.நகர் முத்துரங்கன் சாலையில் நடந்தது. மாநில துணை பொதுசெயலாளர் சகாதேவன் தலைமை தாங்கினார். வடக்கு மண்டல இணை பொது செயலாளர் ஏ.கே.மூர்த்தி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது:-

மதுவுக்கு எதிராக போராட்டம் நடத்தி தமிழ்நாடு முழுவதும் 90 ஆயிரம் மதுக்கடைகளை மூடியவர் நமது நிறுவனர். அடுத்த 20 வருடங்களில் நாட்டில் என்ன நடக்கும் என்பதை அறிந்து அதற்கேற்ப திட்டங்களை செய்வார்.

இன்று காலநிலை மாற்றம் பற்றி பேசுகிறார்கள். மும்பை வெள்ளத்தில் மிதக்கிறது. சென்னையில் குடிக்க தண்ணீர் இல்லை. ஐரோப்பாவில் 42.6 டிகிரி சென்டி கிரேடு வெப்பம் நிலவுகிறது. உலகம் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

இதை முன்பே உணர்ந்து தான் பசுமை தாயகம் அமைப்பை தொடங்கி பல்லாயிரக்கணக்கான மரங்களை நட்டுள்ளார்.

சமூக நீதிக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி பல இட ஒதுக்கீடுகளை பெற்று தந்திருக்கிறார். 3 இடஒதுக்கீடுகளை பெற்று தந்த ஒரே தலைவர் நமது தலைவர். இடஒதுக்கீடு என்பது சலுகை கிடையாது. அது மக்களின் உரிமை.

ஆட்சிக்கு வர வேண்டும், பதவிக்கு வர வேண்டும் என்ற எண்ணம் நமக்கு கிடையாது.

பாராளுமன்ற தேர்தலில் மக்கள் ஏமாந்து விட்டீர்கள். 5 பவுன் நகைக் கடன் தள்ளுபடி என ஸ்டாலின் சொன்னதை நம்பியா ஓட்டு போட்டீர்கள்? அவரால் என்ன செய்ய முடியும். அவர் எதிர்க்கட்சி தலைவர். அவரால் சட்டசபையில் தினமும் வெளிநடப்பு தான் செய்ய முடியும்.

நீங்கள் இன்னும் வெகுளியாக இருக்கிறீர்கள். நன்றாக சிந்தியுங்கள். 17 ஆண்டுகளாக வரைவு அறிக்கை தாக்கல் செய்த ஒரே கட்சி பா.ம.க. 2001-ல் இருந்து மாதிரி பட்ஜெட் போட்டுக் கொண்டிருக்கிறோம்.

தேர்தல் அறிக்கையில் பல்வேறு நல்ல திட்டங்களை கூறி இருந்தோம். ஆனால் 1 இடத்திலும் வெற்றியை மக்கள் தரவில்லை.

எங்களை பொறுத்தவரை கூட்டணிக்காக தமிழகத்தின் உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம். காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என முதல்-அமைச்சரிடம் கூறி உள்ளோம். அதற்காக நாங்கள் எந்த அளவுக்கும் பாடுபடுவோம். அதையும் மீறி ஹைட்ரோ கார்பன் திட்டம் கொண்டு வந்தால் அதை எதிர்த்து போராட்டம் நடத்துவோம். கூட்டணியை பற்றி எங்களுக்கு கவலை கிடையாது. நாங்கள் அடையாளத்துக்காக கட்சி நடத்தவில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News