செய்திகள்
கோப்புபடம்.

வடகிழக்கு பருவமழை சங்கிலிப்பள்ளம் ஓடையில் வெள்ளப்பெருக்கு அபாயம்

Published On 2021-11-22 08:43 GMT   |   Update On 2021-11-22 08:43 GMT
கடந்த சில வாரங்களாக பெய்த கனமழையால் பல்லடம் சுற்றுப்பகுதிகளில் உள்ள குளம் குட்டைகள் நிரம்பி அல்லாளபுரம் குளமும் நிறையும் தருவாயில் உள்ளது.
திருப்பூர்:

பல்லடம் வடகிழக்கு பகுதியில் பெய்யும் மழைநீர் பல்வேறு சிற்றோடைகள் வழியாக 8 குளங்களில் சேகரமாகிறது. அத்துடன் ஆங்காங்கே உள்ள சிறு குட்டைகளிலும் தண்ணீர் தேங்குகிறது. இறுதியாக உள்ள அல்லாளபுரம் குளத்தில் இருந்து தண்ணீர் வெளியேறினால், வீரபாண்டி மீனாம்பாறையை தாண்டி வரும்போது சங்கிலிப்பள்ளம் என்ற பெயருடன் மாநகராட்சி எல்லையில் நுழைகிறது.

கடந்த சில வாரங்களாக பெய்த கனமழையால் பல்லடம் சுற்றுப்பகுதிகளில் உள்ள குளம் குட்டைகள் நிரம்பி அல்லாளபுரம் குளமும் நிறையும் தருவாயில் உள்ளது. 

இனிவரும் நாட்களில் மழை பெய்தால் திருப்பூர் சங்கிலிப்பள்ளம் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். பல்லடம் சுற்றுப்பகுதியில் சிறிய மழை பெய்தாலும், சங்கிலிப்பள்ளம் ஓடையில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே சங்கிலிப்பள்ளம் ஓடையின் அருகே வசிக்கும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.மாநகராட்சி நிர்வாகம் ஓடையில் உள்ள புதர், செடிகளை அகற்றினால் மட்டும் போதாது. ஓடைகளின் ஓரமாக உள்ள, ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற வேண்டும்.

அதுவரை வீட்டில் வசிக்கும் மக்களுக்கு பாதிப்பு வராமல் எச்சரிக்கை விடுப்பதும் அதிகாரிகளின் கடமையாகிறது. எனவே மாநகராட்சி நிர்வாகம் சிறப்பு குழுவை அமைத்து அல்லாளபுரம் குளம், சங்கிலிப்பள்ளம் ஓடை, ஜம்மனை ஓடைகளை கண்காணிக்க வேண்டும். 

கடந்த 2011 வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட உயிர் சேதம், பொருட்சேதங்களை நினைவு கூர்ந்து பார்த்து மழை பெய்யும் நாட்களில் கூடுதல் கவனம் செலுத்தி கண்காணிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News