லைஃப்ஸ்டைல்
எதிர்மறை எண்ணங்கள்

எண்ணம் போல் வாழ்க்கை அமைய...

Published On 2021-09-16 04:35 GMT   |   Update On 2021-09-16 07:38 GMT
90 முறை தோற்றாலும், ஏதேனும் ஒருமுறை நிச்சயமாக வெற்றி இலக்கை அடைய முடியும் என்ற துணிச்சலான நம்பிக்கை உங்களிடம் இருக்கும் வரை, நீங்கள் பயணம் செய்யும் பாதையில் முட்கள் நிறைந்திருந்தாலும் பொருட்படுத்தாமல் முன்னேறுவீர்கள்.
வெற்றிக்கான படிக்கல்தான் தோல்வி. தோல்வியின்போது கிடைக்கும் அனுபவமும், படிப்பினையும் நம்மை வெற்றியை நோக்கி அழைத்து செல்லும். ஒவ்வொருவரும் தோல்வியை தாழ்வு மனப்பான்மையுடன் அணுகுவதில்தான் சிக்கல் ஏற்படுகிறது. அதை அனுபவமாக கொண்டு செயல்பட்டால் வெற்றி வாசலில் காத்திருக்கும்.

தினந்தோறும் மனதில் என்னால் முடியும் என்ற மந்திரச்சொல்லை சொல்லிக்கொண்டே இருங்கள். நம்பிக்கை ஒரு நாளும் பொய்யாக்காது. தன்னம்பிக்கை மிகுந்தவராக உங்களை வெளிப்படுத்திக்கொள்ளுங்கள். உங்கள் எண்ணம் போல் எல்லாம் அமையும்.

பலம் மற்றும் பலவீனத்தை சீர் தூக்கி பார்த்து ஒரு செயலில் இறங்க வேண்டும். இறங்கிய பின்னர் என்னால் முடியுமா? என்ற சந்தேகம் எழக்கூடாது.

நீங்கள் எந்த வார்த்தையை அடிக்கடி சொல்கிறீர்களோ? அது ஒரு நாள் உண்மையாகும். எனவே வெற்றி அடைவேன் எனும் வார்த்தையை அடிக்கடி கூறிகொண்டு இருங்கள். அவநம்பிக்கை தாழ்வு மனப்பான்மை இரண்டையும் மனதில் இருந்து தூக்கி எறியுங்கள். நம்மை விட அறிவு குறைந்த ஜீவராசிகள் கூட அவற்றின் சக்திக்கு ஏற்ப திறமையாக செயல்படுகின்றன.

சுற்றியுள்ளவர்கள் உங்களை உதாசீனப்படுத்தலாம். ஏளனப்படுத்தலாம். நம்மால் முடியாதா? இவர்கள் சொல்வது போல் அனைத்தும் நடந்து விடுமோ? என மனதுக்குள் எழும் எதிர்மறை எண்ண திரைகளை நிறுத்த வேண்டும். எதையும் நேர்மறையாக நினைக்கும் போது தான் உங்களது ஆற்றல் மிகப்பெரிதாக உருவெடுத்து வெற்றி இலக்கை அடைவதற்கான வழியை காட்டும். நம்பிக்கை விதையை விதைத்து விடாமுயற்சியுடன் அதை வளர்த்து வாருங்கள்.

சூழ்நிலைகளை நிதானத்தோடு பகுத்தாய்ந்து முடிவுகளை எடுக்க வேண்டும். அவ்வாறு எடுக்கும் போது தான் இலக்குகளை எந்த தங்கு தடையுமின்றி அடைய முடியும்.

எப்படியும் வாழலாம் என்ற வரைமுறையற்ற வாழ்க்கையை விடுத்து இப்படித்தான் வாழ வேண்டும்என்ற குறிக்கோளோடு வாழும் போது தான் வெற்றி என்பது நம்மை நெருங்கி வரும்.

யாரையும் உங்களை விட குறைவாக எடைபோடக்கூடாது. அது உங்கள் வெற்றிக்கு மிகப்பெரிய தடையாக இருக்கும். எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும் வரை முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும். 90 முறை தோற்றாலும், ஏதேனும் ஒருமுறை நிச்சயமாக வெற்றி இலக்கை அடைய முடியும் என்ற துணிச்சலான நம்பிக்கை உங்களிடம் இருக்கும் வரை, நீங்கள் பயணம் செய்யும் பாதையில் முட்கள் நிறைந்திருந்தாலும் பொருட்படுத்தாமல் முன்னேறுவீர்கள்.

மனதில் நேர்மறை எண்ணங்களை கொண்டு செயல்படுங்கள். நினைத்தது நிறைவேறும். எண்ணம் போல்தான் வாழ்க்கை.
Tags:    

Similar News