செய்திகள்
சிமெண்ட்

சிமெண்ட் விலை உயர்வால் கட்டிட தொழில் பாதிப்பு

Published On 2021-06-10 07:00 GMT   |   Update On 2021-06-10 13:15 GMT
விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு ஒரு குழுவை ஏற்படுத்தி அக்குழுவினர் கட்டுமான பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்து அறிவித்தால்தான் அனைத்து தரப்பினரும் பயனடைவர்.
திருப்பூர்:

தமிழகத்தில் கொரோனா தடுப்பு ஊரடங்கால் தொழில்துறை கடுமையாக பாதிப்படைந்துள்ளது. அதே சமயம் கட்டிட கட்டுமான பொருட்களான சிமெண்ட், கம்பி போன்றவற்றின் விலை உயர்ந்து வருகிறது. இதனால் வங்கிக்கடன் உதவி பெற்று வீடு உள்ளிட்ட கட்டிடப்பணிகள் செய்து வருவோரும், ஒப்பந்த அடிப்படையில் கட்டிட வேலை எடுத்து செய்வோரும் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர்.

விலை உயர்வால் பலர் கட்டிடப்பணிகளை பாதியிலேயே நிறுத்தியுள்ளனர். கடந்த மாதம் ஒரு மூட்டை சிமெண்ட் சில்லறை விலையில் ரூ.360க்கு விற்பனையானது. தற்போது ரூ.480 ஆக விலை உயர்ந்துள்ளது. அதேபோல கட்டுமானக் கம்பி கிலோ ரூ.40க்கு விற்பனையானது. தற்போது ரூ.75 ஆக விலை உயர்ந்துள்ளது. இதுகுறித்து பல்லடம் கட்டிடப்பொறியாளர் சங்க முன்னாள் தலைவர் தனபால் கூறியதாவது:-

தமிழகத்தில் கடந்த ஓராண்டாக சிமெண்ட் விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. கொரோனா தொற்று பொதுமுடக்கத்துக்கு முன்பு தமிழ்நாடு பிராண்ட் சிமென்ட் ஒரு மூட்டை ரூ.360க்கு விற்பனையானது. தற்போது ரூ.480க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆந்திரா பிராண்ட் சிமெண்ட் ஒரு மூட்டை ரூ.340க்கு விற்பனையானது. தற்போது ரூ.420க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மூலப்பொருட்களின் விலை உயர்வு பெட்ரோல், டீசல் விலை உயர்வு போன்ற காரணத்தினால் விலை உயர்த்தப்பட்டு இருப்பதாக சிமெண்ட் மற்றும் கம்பி தயாரிப்பாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதனால் கட்டிடம் கட்டுவோர் பாதிப்படைந்துள்ளனர். அதனால் கட்டுமானப்பொருள்கள் விற்பனை செய்வோருக்கும் விற்பனை குறைந்துள்ளது. சிமெண்ட், கம்பி உள்ளிட்ட கட்டுமானப்பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு ஒரு குழுவை ஏற்படுத்தி அக்குழுவினர் கட்டுமான பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்து அறிவித்தால்தான் அனைத்து தரப்பினரும் பயனடைவர் என்றார். 
Tags:    

Similar News