செய்திகள்
மல்லிகை பூ

அதிக விளைச்சல் காரணமாக நெல்லை, தென்காசியில் பூக்கள் விலை குறைந்தது

Published On 2021-11-24 10:16 GMT   |   Update On 2021-11-24 10:16 GMT
கடந்த வாரம் மல்லிகை மற்றும் பிச்சி பூக்களின் விலை ரூ.500 முதல் ரூ.700 வரை விற்கப்பட்ட நிலையில் இன்று ஒரு கிலோ மல்லிகை பூவின் விலை ரூ.350 ஆக குறைந்துள்ளது.
ஆலங்குளம்:

பண்டிகைகள், சுபமுகூர்த்த தினங்களில் முக்கிய இடம் பிடிப்பது பூக்கள் தான். ஆனால் இதுபோன்ற முக்கிய தினங்களில் பூக்களின் விலை உச்சத்தை எட்டிவிடும்.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பூக்கள் விற்பனை எப்போதுமே அதிகரித்து காணப்படும். குமரி மாவட்டம் தோவாளை பூ மார்க்கெட்டுக்கு அடுத்தபடியாக நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள மார்க்கெட்டில் பூக்கள் வரத்து அதிகமாக இருக்கும். அதேபோல் சங்கரன்கோவில் மார்க்கெட்டிலும் டன் கணக்கில் பூக்கள் விற்பனையாகிறது.

இந்த மார்க்கெட்டுக்கு நெல்லை மட்டுமல்லாது அண்டை மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் தங்களது வயல்களில் இருந்து பூக்களை பறித்து விற்பனைக்கு கொண்டு வருவார்கள். ஆயுதபூஜை, தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் பூக்களின் விலை உச்சத்தை அடைந்துவிடும்.

கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தீபாவளியின்போது மல்லிகை பூக்களின் விலை கிலோ ரூ.1000 முதல் ரூ.1,300 வரை விற்பனை ஆனது. பிச்சி பூக்களின் விலையும் ரூ.1,000 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த மழையால் பூக்கள் விளைச்சல் அதிகரித்தது.

மேலும் மழையால் பெரும்பாலானோர் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளை நடத்தாததால் பூக்களுக்கான தேவை குறைந்தது. இதனால் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பூக்களின் விலை குறையத்தொடங்கியது.

கடந்த வாரம் மல்லிகை மற்றும் பிச்சி பூக்களின் விலை ரூ.500 முதல் ரூ.700 வரை விற்கப்பட்ட நிலையில் இன்று ஒரு கிலோ மல்லிகை பூவின் விலை ரூ.350 ஆக குறைந்துள்ளது. பிச்சி பூ ஒரு கிலோ ரூ.250-க்கும், கேந்தி பூக்கள் ரூ.40 வரையிலும் விற்பனையானது. நாட்டு ரோஜா பூக்கள் கிலோ ரூ.50-க்கும் கீழாக குறைந்தது. ஊட்டி ரோஜா ரூ.100-க்கும், சம்பங்கி ரூ.50-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதேபோல் முல்லை விலையும் வெகுவாக குறைந்ததால் விவசாயிகள் வருத்தம் அடைந்துள்ளனர். எனினும் அடுத்த மாதம் குளிர்காலம் என்பதால் வயல்களில் பூக்களின் விளைச்சல் வெகுவாக குறைந்துவிடும். அந்த காலகட்டத்தில் பூக்கள் விலை அதிகரிக்க தொடங்கிவிடும்.
Tags:    

Similar News