செய்திகள்
தேவேகவுடா

முன்னாள் பிரதமர் தேவேகவுடாவுக்கு ரூ.60 லட்சம் மதிப்பிலான சொகுசு கார்

Published On 2020-09-25 07:19 GMT   |   Update On 2020-09-25 07:19 GMT
கர்நாடக அரசு சார்பில் சமீபத்தில் வாங்கப்பட்டு இருந்த ரூ. 60 லட்சம் மதிப்பிலான விலை உயர்ந்த புதிய சொகுசு காரை தேவேகவுடாவுக்கு ஒதுக்கி எடியூரப்பா உத்தரவிட்டார்.
பெங்களூரு:

முன்னாள் பிரதமர் தேவேகவுடா, மாநிலங்களவை உறுப்பினராக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, தனக்கு ‘வசதி’யான கார் வேண்டும் என்று முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து சமீபத்தில் வாங்கப்பட்டு இருந்த ரூ. 60 லட்சம் மதிப்பிலான விலை உயர்ந்த புதிய சொகுசு காரை தேவேகவுடாவுக்கு ஒதுக்கி எடியூரப்பா உத்தரவிட்டார்.

காப்பீடு, சாலை வரியோடு இந்த காரின் விலை ரூ. 76 லட்சமாகும். அரசு கார் என்பதால் வரியில்லாமல் ரூ. 60 லட்சத்துக்கு வாங்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் என்பதை கருத்தில் கொண்டு விலை உயர்ந்த கார் வழங்கப்பட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரசுப் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்த்திருத்தத் துறையின் சார்பில் புதிய கார்களை வாங்குவதற்கு விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளில், அமைச்சர்கள், மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களின் கார்கள் ரூ. 22 லட்சத்துக்கு மிகாமலும், வாரியங்கள், கழகங்களின் தலைவர்களின் கார்கள் ரூ. 11 லட்சத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும். தேவேகவுடாவுக்காக விதிகள் மாற்றப்பட்டு, ரூ. 22 லட்சத்துக்குப் பதிலாக ரூ. 60 லட்சம் மதிப்பில் கார் வாங்கப்பட்டுள்ளது.

இதற்கு எடியூரப்பா சிறப்பு அனுமதி அளித்ததாக அரசு அதிகாரிகள் கூறுகிறார்கள். கர்நாடக அரசில் ரூ. 60 லட்சம் அளவுக்கு விலை உயர்ந்த ‘வால்வோ’ காரை வைத்திருக்கும் அரசியல்வாதி தேவேகவுடா மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News