செய்திகள்
திருமலை

அரசு குடியிருப்பில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை- காரணம் என்ன? போலீஸ் விசாரணை

Published On 2021-03-05 23:13 GMT   |   Update On 2021-03-05 23:13 GMT
வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் எதிரே உள்ள குடியிருப்பில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வேலூர்:

வேலூர் மக்கான் பகுதியை சேர்ந்தவர் ராமு (வயது54). இவர் திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 2 மகன்கள், ஒரு மகள் உண்டு. 2-வது மகன் திருமலை (18). இவர் வேலூரில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

2 நாட்களுக்கு முன்பு ராமு வசித்துவந்த மற்றொரு வீடான வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் எதிரே உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள வீட்டுக்கு திருமலை சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் நேற்று குடியிருப்பில் உள்ள வீட்டுக்கு சென்றனர். அங்கு வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்தது. பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது திருமலை தூக்கில் பிணமாக தொங்கினார். இதைபார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து வேலூர் சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் உடலை கைப்பற்றி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், திருமலை தூக்குப்போட்டு தற்கொலை செய்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்ற காரணம் தெரியவில்லை. முழுமையான விசாரணைக்கு பின்னரே தற்கொலைக்கான காரணம் தெரியவரும் என்றனர்.
Tags:    

Similar News