செய்திகள்
நோய் கட்டுப்பாட்டு தெரு

சென்னையில் கொரோனா கட்டுப்பாடு தெருக்கள் எண்ணிக்கை 1120 ஆக உயர்வு

Published On 2021-04-13 05:35 GMT   |   Update On 2021-04-13 08:28 GMT
கட்டுப்பாட்டு தெரு அதிகம் உள்ள மண்டலத்தில் தேனாம்பேட்டை முதலிடம் வகிக்கிறது. அங்கு 212 தெருக்கள் நோய் கட்டுப்பாட்டு தெருக்களாக அறிவிக்கப்பட்டன.
சென்னை:

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. தமிழகத்திலும் கொரோனா 2-வது அலையால் நோய்த் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முககவசம் அணியாமல் செல்பவர்கள், பொது இடங்களில் எச்சில் துப்புபவர்கள் ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. மதக்கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருமணம் மற்றும் இறுதி சடங்கு நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட் டுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதையடுத்து சென்னை மாநகராட்சியும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு மருத்துவ பரிசோதனையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று உள்ள பகுதிகள் கண்டறியப்பட்டு அவை கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதுபோன்ற தடுப்பு நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.

மேலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தி அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி உள்ளிட்ட பணிகளை செய்வதற்காக 12 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.



கொரோனா பரவல் அதிகரிப்பதை தடுக்க 3 பேருக்கு மேல் தொற்று உள்ளவர்கள் வசிக்கும் தெருக்கள் கண்டறியப்படுகின்றன. இந்த தெருக்களுக்குள் பொதுமக்கள் நுழைவதை தடுக்கவும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வெளியே வருவதை தடுக்கவும் அவை நோய் கட்டுப்பாட்டு தெருக்களாக அறிவிக்கப்படுகின்றன.

நோய் கட்டுப்பாடு தெருக்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு மருந்து, உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வாங்கி கொடுப்பதற்காக சுமார் 4 ஆயிரம் பேர் நியமிக்கப்பட் டுள்ளனர்.

இதற்கிடையே தற்போது கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருவதால் சென்னையில் நோய் கட்டுப்பாட்டு தெருக்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. கடந்த வாரம் சென்னையில் நோய் கட்டுப்பாட்டு தெருக்களின் எண்ணிக்கை 800 ஆக இருந்தது.

தற்போது நோய் கட்டுப்பாட்டு தெருக்களின் எண்ணிக்கை 1120 ஆக உயர்ந்துள்ளது. ஒரே வாரத்தில் 320 தெருக்கள் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக அதிகரித்துள்ளன. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

சென்னையில் 15 மண்டலங்களில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஒரு தெருவில் 3 பேருக்கு மேல் இருந்தால் அந்த தெரு நோய் கட்டுப்பாட்டு தெருவாக அறிவிக்கப்படுகிறது. அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

கட்டுப்பாட்டு தெரு அதிகம் உள்ள மண்டலத்தில் தேனாம்பேட்டை முதலிடம் வகிக்கிறது. அங்கு 212 தெருக்கள் நோய் கட்டுப்பாட்டு தெருக்களாக அறிவிக்கப்பட்டன.

ராயபுரம் மண்டலத்தில் 166 தெருக்களும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 106 தெருக்களும், அண்ணா நகர் மண்டலத்தில் 105 தெருக்களும், ஆலந்தூர் மண்டலத்தில் 96 தெருக்களும், அம்பத்தூர் மண்டலத்தில் 87 தெருக்களும், திரு.வி.க. நகர் மண்டலத்தில் 74 தெருக்களும், அடையாறு மண்டலத்தில் 69 தெருக்களும், மாதவரம் மண்டலத்தில் 52 தெருக்களும், பெருங்குடி மண்டலத்தில் 44 தெருக்களும், தண்டையார்பேட்டை மண்டலத்தில் 27 தெருக்களும், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 25 தெருக்களும், திருவொற்றியூர் மண்டலத்தில் 24 தெருக்களும், வளசரவாக்கம் மண்டலத்தில் 20 தெருக்களும், மணலி மண்டலத்தில் 13 தெருக்களும் என மொத்தம் 1120 தெருக்கள் நோய் கட்டுப்பாட்டு தெருக்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

நோய் கட்டுப்பாட்டு தெருக்களின் எண்ணிக்கை வரும் நாட்களில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Tags:    

Similar News