ஆன்மிகம்
ராமேசுவரம் கோவில் சேதுமாதவ தெப்பக்குளம் நிரம்பி உள்ளதை படத்தில் காணலாம்.

நிரம்பி ததும்பும் தீர்த்தக்கிணறுகள்: தீர்த்தமாட ஏங்கும் பக்தர்கள்

Published On 2020-12-10 03:51 GMT   |   Update On 2020-12-10 03:51 GMT
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகளிலும் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து இருக்கிறது. இவ்வாறு தீர்த்தங்கள் நிரம்பிய நிலையில் காட்சி அளிப்பது மிகவும் மகிழ்ச்சிக்குரியது ஆகும்
வங்கக்கடலில் உருவாகி இருந்த புயல் சின்னம் காரணமாக கடந்த ஒரு வாரமாக ராமேசுவரம் பகுதியில் நல்ல மழை பெய்தது. தொடர்ந்து 5 நாட்களுக்கு மேலாக பெய்த தொடர் மழையால் ராமேசுவரம் பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளில் உள்ள கிணறுகளிலும் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.

ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகளிலும் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து இருக்கிறது. அதிலும் குறிப்பாக கடந்த 4 மாதத்திற்கு முன்பு தண்ணீர் குறைந்த அளவில் காணப்பட்ட கங்கா, யமுனா தீர்த்த கிணறுகளில் தற்போது, கிணற்றின் மேல் பகுதி வரையிலும் உயர்ந்துள்ளது.

சேது மாதவ தீர்த்த தெப்பக்குளத்தில் நீர் நிரம்பி உள்ளது. மற்ற தீர்த்த கிணறுகளும் நிரம்பி, தண்ணீர் ததும்பிக் கொண்டிருக்கின்றன. கோவிலோடு சேர்ந்த லட்சுமண தீர்த்த குளத்திலும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இவ்வாறு தீர்த்தங்கள் நிரம்பிய நிலையில் காட்சி அளிப்பது மிகவும் மகிழ்ச்சிக்குரியது ஆகும்

ஆனால், கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 23-ம் தேதி முதல் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் பக்தர்கள் நீராட தடைவிதிக்கப்பட்டு தீர்த்த கிணறுகள் பகுதி பூட்டப்பட்டுள்ளன.

கடந்த செப்டம்பர் 1-ம் தேதி முதல் ராமேசுவரம் கோவில் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் வழக்கம்போல் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், 265 நாட்களை கடந்தும் ராமேசுவரம் கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகளோ பக்தர்கள் நீராடுவதற்கு திறக்கப்படவில்லை. இதனால் இந்த தீர்த்த கிணறுகளை நம்பி வாழும் ராமேசுவரத்தில் உள்ள 450 யாத்திரை பணியாளர்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். அவர்களில் பலர் கூலி வேலைக்கும், கட்டிட வேலைக்கும் மற்றும் மீன் கம்பெனி வேலைக்கும் சென்று வருகின்றனர்.

அதே நேரத்தில் கோவிலில் தரிசனத்துக்கு மட்டும் அனுமதி என்பதால், தீர்த்தமாடலாம் என நினைத்து வெகுதொலைவில் இருந்து வரும் பக்தர்கள் ஏமாற்றத்துடன் நிலை உள்ளது. எனவே உரிய கட்டுப்பாடுகளுடன் கோவிலில் தீர்த்த கிணறுகளில் பக்தர்கள் நீராட அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

இதுகுறித்து அகில இந்திய யாத்திரை பணியாளர்கள் பலமுறை அரசுக்கு கோரிக்கை விடுத்தும் தீர்த்த கிணறுகள் திறப்பது குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வரவில்லை. இதனால் தீர்த்த கிணறுகளை திறக்க வலியுறுத்தி யாத்திரை பணியாளர்கள் அனைவரும் குடும்பத்தோடு கோவில் முன்பு போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ராமேசுவரம் கோவில் இணை ஆணையர் கல்யாணியிடம் கேட்டபோது அவர் கூறுகையில், “ராமேசுவரம் கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகளை திறக்க வேண்டுமென்று யாத்திரை பணியாளர்கள் மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவை அரசுக்கு அனுப்பி வைத்துள்ளேன். இதுவரையிலும் எந்த ஒரு அனுமதியும் வரவில்லை. அரசின் உத்தரவு வரும்பட்சத்தில் உடனடியாக தீர்த்த கிணறுகள் திறக்கப்பட்டு வழக்கம் போல் பக்தர்கள் நீராட அனுமதிக்கப்படுவார்கள்” என்றார்.
Tags:    

Similar News