செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

உணவு தானிய உற்பத்தியில் தமிழகம் சாதனை படைத்துள்ளது- முதலமைச்சர் பழனிசாமி தகவல்

Published On 2020-01-09 09:10 GMT   |   Update On 2020-01-09 09:13 GMT
தமிழ்நாடு உணவு தானிய உற்பத்தியில் இந்தாண்டு புதிய மைல் கல்லை அடையும் என்று சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை:

சட்டமன்றத்தில் கவர்னர் ஆற்றிய உரையின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆற்றிய பதிலுரை வருமாறு:-

நீண்ட நாட்களாக தூர்வாரப்படாமலும், சீரமைக்கப்படாமலும் இருந்த பெரிய ஏரிகள், சிறு பாசன ஏரிகள், குளங்கள், ஊரணிகள் மற்றும் குட்டைகள் போன்ற 34,871 நீர்நிலைகள் 2017 முதல் இன்று வரை 2,182 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டுள்ளது.

இப்பணிகள், குடிமராமத்து திட்டத்தின் கீழ், விவசாய சங்கங்கள் மூலமாக அவர்களின் பங்கேற்புடன் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளின் பராமரிப்பில் உள்ள 1,315 நீர்நிலைகள் 811.68 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டுள்ளன.

இதைத் தவிர ஆறுகள், ஓடைகள், கால்வாய்கள் போன்றவற்றில் 1,141 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 59 பெரிய தடுப்பணைகள் பொதுப்பணித் துறையின் மூலமும், 40 ஆயிரம் சிறிய தடுப்பணைகள் ஊரக வளர்ச்சித் துறையின் மூலமும் கட்டப்பட்டுள்ளன.

தமிழ்நாடு முழுவதும் கடந்த ஆண்டு இதே நாளில் 85 லட்சத்து 30 ஆயிரம் ஏக்கர் என இருந்த வேளாண் பயிர் சாகுபடி பரப்பு, இந்த ஆண்டில் இதுவரை 7 லட்சம் ஏக்கர் கூடுதலாக, அதாவது 97 லட்சத்து 31 ஆயிரம் ஏக்கரில் வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இதனால் இந்தாண்டு, தமிழ்நாடு உணவு தானிய உற்பத்தியில் ஒரு புதிய மைல் கல்லை அடையும் என்பதை இம்மாமன்றத்திற்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை மாநகரில் உள்ள கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய் உள்ளிட்ட நீரோடைகளில் கழிவு நீர் கலப்பதை முற்றிலும் தடுத்திட 2,371 கோடி ரூபாய் செலவில் திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன.

சென்னை குடிநீர் தேவையினை பூர்த்தி செய்யும் வகையில், அம்மா அவர்களால் மீஞ்சூர் மற்றும் நெம்மேலியில் தலா 100 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது.

அதே போன்று, 27.6.2019 அன்று நெம்மேலியில் 150 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட ஒரு புதிய திட்டத்தினை நான் துவக்கி வைத்தேன். பேரூரில், 400 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்திற்கு அரசாணை வெளியிடப்பட்டு, பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன.

இத்திட்டங்களினால் வரும் காலத்தில் பருவமழை பொய்த்தாலும் சென்னை நகர மக்களுக்குத் தேவையான குடிநீர் வழங்க முடியும்.

வேளாண் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்குடன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாக நடப்பு நிதியாண்டில், 31.12.2019 வரை சுமார் 9 லட்சம் குறு, சிறு விவசாயிகளுக்கு 7,000 கோடி ரூபாய் பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.

பருவமழை சிறப்பாக இருந்ததாலும், சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளதாலும், இந்த ஆண்டு நெல் உற்பத்தி அதிகரிக்கும் என்பதால், வேளாண் பெருமக்களுக்கு உரிய விலை கிடைக்க, தேவைப்படும் இடங்களில் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும்.

ஆழ்கடல் மற்றும் அண்மைக் கடல் மீன் பிடிப்பில் ஈடுபடும் மீனவர்களுக்கு 25,000 கருவிகள், 160 செயற்கைக்கோள் கருவிகள், இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் மூலம் 507 டிரான்ஸ்பான்டர் கருவிகள் மற்றும் 200 நாவிக் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து மீனவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News