செய்திகள்
காசி

வழக்கை வேறு மாவட்டத்துக்கு மாற்ற வேண்டும்- நாகர்கோவில் காசி மதுரை ஐகோர்ட்டில் மனு

Published On 2020-09-29 04:07 GMT   |   Update On 2020-09-29 04:07 GMT
என் மீதான வழக்குகளை வேறு மாவட்ட கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும் என்று நாகர்கோவில் காசி மதுரை ஐகோர்ட்டில் மனு அளித்துள்ளார்.
மதுரை:

நாகர்கோவிலை சேர்ந்த காசி என்பவர், இளம்பெண்களை ஆபாச படம் எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்ததாக கைது செய்யப்பட்டார். தற்போது சிறையில் இருக்கும் காசி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

என் மீது நாகர்கோவில் கோட்டார் போலீசார் வழக்குபதிவு செய்து என்னை கைது செய்தனர். பின்னர் என் மீது நேசமணிநகர், வடசேரி ஆகிய போலீஸ் நிலையங்களிலும் புகார் தெரிவிக்கப்பட்டது. அவற்றின் மீதும் போலீசார் வழக்குபதிவு செய்தனர். இதை தொடர்ந்து, எனக்கு ஆதரவாக வக்கீல்கள் கோர்ட்டில் ஆஜராவதில்லை என்று நாகர்கோவில் வக்கீல்கள் சங்கம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தநிலையில் என் மீதான வழக்குகளின் குற்றப்பத்திரிகையை கடந்த மாதம் போலீசார், நாகர்கோவில் கோர்ட்டில் தாக்கல் செய்து உள்ளனர். நாகர்கோவில் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. சாட்சிகளிடம் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் எனது தரப்பு வாதங்களை முன்வைக்க எனக்கு சட்ட உதவி செய்வதற்கு வக்கீல்கள் முன்வரவில்லை. என்னால் எனது தரப்பு வாதங்களை எடுத்து வைக்க முடியவில்லை. ஒரு தரப்புக்கு சட்ட உதவி இல்லாமல் வழக்கு நடத்தி தீர்ப்பு வழங்கினால் அது ஏற்புடையதாக இருக்காது. அது அடிப்படை உரிமைக்கு எதிரானது. எனவே என் மீதான வழக்குகளை வேறு மாவட்ட கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும். அதுவரை நாகர்கோவில் கோர்ட்டில் இந்த வழக்கை விசாரிக்க இடைக்கால தடைவிதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி பொங்கியப்பன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சம்பந்தப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவற்றுடன் இந்த வழக்கையும் சேர்த்து பட்டியலிடும்படி நீதிபதி உத்தரவிட்டார்.
Tags:    

Similar News