வழிபாடு
உத்திரகோசமங்கை கோவிலில் 32 வகை மூலிகை அபிஷேகம்

உத்திரகோசமங்கை கோவிலில் 32 வகை மூலிகை அபிஷேகம்

Published On 2021-12-20 08:59 GMT   |   Update On 2021-12-20 08:59 GMT
ஆருத்ரா தினமான அன்று மட்டுமே, நடராஜரை மரகதக் கோலத்தில் கண்டுகளிக்கலாம். அன்றைய தினம் பூசப்படும் சந்தனக் காப்பிலேயே அடுத்த மார்கழி திருவாதிரை வரை நடராஜர் காட்சி தருவார்.
தமிழ்நாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழமையான சிவாலயங்கள் இருக்கின்றன. இவற்றில் 276 தலங்கள் பாடல் பெற்ற தலங்கள் என்ற சிறப்பை பெற்றவை.
இந்த பழம்பெரும் சிவத்தலங்களில் மகத்துவமும் தனித்துவமும் நிறைந்தது உத்தரகோசமங்கை எனும் திருத்தலமாகும். இந்த திருத்தலம் ராமநாதபுரத்துக்கு மிக, மிக அருகில் உள்ளது.

சிவத்தலங்களில் பாடல் பெற்ற முதல் தலம் இந்த தலம்தான். இதன்மூலம் இந்த தலமே தமிழ்நாட்டின் முதல் சிவாலயம் என்பதை உறுதிபடுத்துகிறது.
சமயக்குறவர்களில் நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகர் தம் வாழ்நாளில் பெரும் பகுதியை இத்தலத்தில் கழித்தார். அவர் தன் பாடலில், சிவன் உண்பதும், உறங்குவதும் உத்தரகோசமங்கை தலத்தில்தான் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஓம் எனும் பிரணவ மந்திரத்தை பார்வதிதேவிக்கு சிவபெருமான் இத்தலத்தில் வைத்துதான் ரகசியமாக சொல்லி கொடுத்தார் என்பார்கள். அதுபோல பார்வதிக்கு நாட்டியக்கலையை ஈசன் இங்கு ரகசியமாக சொல்லிக் கொடுத்தார் என்பார்கள். ‘மண் தோன்றிய போதே மங்கை தோன்றியது’ என்பார்கள். உலகிலேயே முதலில் தோன்றிய சிவன் கோவில் இது என்று கூறப்படுகிறது.

ஆதி காலத்தில் அதுவும் நவக்கிரகங்கள் அறியப்படாத காலத்தில் இருந்த சூரியன், சந்திரன், செவ்வாய் மட்டுமே இங்கு கிரகங்களாக உள்ளது என்பதில் இருந்தே, இந்த ஆலயம் மிக மிகப் பழமையானது என்பதை அறியலாம். சிவபெருமான் பார்வதிதேவிக்கு வேதாகமங்களின் ரகசியங்களை உபதேசம் செய்த இடம் இதுவாகும். அதனால் இந்த ஊருக்கு உத்தரகோசமங்கை என்ற பெயர் தோன்றியது என்று சொல்கிறார்கள். அதாவது உத்திரன் (ருத்திரன்) + கோசம் + மங்கை. மங்கைக்கு உத்திரன் உபதேசம் செய்த இடம், ஆதலால் உத்திரகோசமங்கை என்றானது என்கிறார்கள்.

ஆனால் இத்தல பெயர் விளக்கத்துக்கு வேறொன்றும் சொல்லப்படுகிறது. உத்திரம் என்றால் உபதேசம். கோசம் என்றால் ரகசியம். மங்கை என்றால் பார்வதி என்று பொருள். பார்வதிதேவிக்கு ஈசன் ரகசியமாக வேதத்தை உபதேசம் செய்த இடம் என்ற அர்த்தத்தில் இத்தலம் உத்தரகோச மங்கை என்ற பெயரில் அழைக்கப்படுகிறது என்கிறார்கள்.

இத்தல மூலவர் ‘மங்களநாதர்’ சுயம்புவாக, இலந்தை மரத்தடியில் தோன்றியவர். அந்த இலந்தை மரமே இவ்வாலயத்தின் தலவிருட்சமாக விளங்கு கிறது. மங்கள நாதரின் உடனுறை அம்பிகையின் திருநாமம் மங்களேஸ்வரி என்பதாகும். மாணிக்கவாசகர் இத் தலத்தில் சிவலிங்க வடி விலும், நின்ற கோலத் திலும் காட்சி தருகிறார். ‘நீத்தல் விண்ணப்பம்’ என்னும் திருவாசகப் பகுதி இத்தலத்தில் பாடப்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. திருவாசகத்தில் 38 இடங் களில் இத்தலத்தைப் போற்றிப் பாடியுள்ளார் மாணிக்கவாசகர்.

உலகிலேயே மிகச்சிறந்த சிவ பக்தனைத்தான் திருமணம் முடிப்பேன் என்று காத்திருந்தாள் மண்டோதரி. இதனால் அவளுக்கு நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இருந்தது. பின்பு இத்தல ஈசனையும், அம்பாளையும் மண்டோதரி வழிபட்டாள். அதன்பிறகே ராவணனை கரம் பிடித்தாள். மேலும் ராவணன்- மண்டோதரி திருமணம் இத்தலத்திலேயே நடைபெற்றது என்று கூறப்படுகிறது.

இங்குள்ள நடராஜ பெருமான் ஐந்தரை அடி உயரம். முழுவதும் மரகத திருமேனி. ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பிலேயே பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். ஆண்டுக்கு ஒருமுறை திருவாதிரை அன்று மட்டுமே சந்தனம் களையப்பட்டு அபிஷேகம் நடைபெறும். அதுவும் 32 வகை மூலிகைகளால் அபிஷேகம் செய்யப்படும்.

ஆருத்ரா தினமான அன்று மட்டுமே, நடராஜரை மரகதக் கோலத்தில் கண்டுகளிக்கலாம். அன்றைய தினம் அதிகாலை 3 மணிக்கு மீண்டும் சந்தனக் காப்பு செய்யப்பட்டு, நடராஜர் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். சூரிய உதயத்திற்கு முன்பு சிறப்பு பூஜைகள் நடைபெறும். அந்தச் சந்தனக் காப்பிலேயே அடுத்த மார்கழி திருவாதிரை வரை நடராஜர் காட்சி தருவார்.

இப்படி பல்வேறு சிறப்புகள் கொண்ட இத்தலத்தில் காலடி எடுத்து வைத்தாலே போதும், நம் மீதான தோஷங்கள் விலகி ஓடிவிடும். இத்தலம் ‘ஆதி சிதம்பரம்’ என்றும் அழைக்கப்படுகிறது. அம்பிகைக்காக இங்கு அறையில் ஆடிய திருத்தாண்டவத்தை தான் நடராஜபெருமான், தில்லை அம்பலத்தில் முனிவர்களுக்காகவும், பக்தர்களுக்காகவும் ஆடுகிறார். எனவே இந்த ஆலயத்தில் உள்ள நடராஜர்தான், ஆதி நடராஜர் என்றும் கூறப்படுகிறது.

திருவாதிரை அன்று கோவிலில் அதிக கூட்டம் இருக்கும் காலை பத்து மணியில் இருந்து மரகத நடராஜரைப் பார்க்கலாம். இரவு 3 மணிக்கு மேல் சந்தனம் பூசிவிடுவார்கள் பிறகு அடுத்த வருடம்தான் மரகத நடராஜரை தரிசிக்க முடியும். அதனால் இரவு சாமி தரிசனம் செய்யும்போது வரிசையில் அதிகநேரம் நிற்கவேண்டியதிருக்கும் கூட்டமும் கட்டுக்கடங்காமல் இருப்பதால் சில நேரம் அதிக தொலைவில் இருந்து வந்து இருப்பவர்கள் மரகதநடராஜரை பார்க்காமலே சந்தனம் பூசப்பட்ட நடராஜரை பார்த்து செல்ல வாய்ப்பு உண்டு. இந்த ஏமாற்றத்தை தவிர்க்க காலையில் வந்துவிட்டால் கூட்டம் சற்று குறைவாக இருக்கும் நேரத்தில் மரகதநடராஜர் தரிசனத்தை எவ்வித சிரமமும் இன்றி தரிசித்து விட்டு செல்லலாம். வயதானவ்ர்கள் குழந்தைகள் வைத்திருப்பவர்கள் காலையில் வந்து விடுவது சிறந்தது.

மாணிக்கவாசகர் திருவாசகத்தில் நீத்தல் வண்ணம், திருப்பொன்னூஞ்சல் பாடியது மட்டுமல்லாமல், பல்வேறு இடங்களுக்கு சென்றாலும் அங்கும் உத்தரகோசமங்கை மன்னா என்றும் பாடியுள்ளார். இறைவனும், இறைவியும் பள்ளியறையில் அமர்ந்து பூஜை செய்யும்போது பள்ளியறை பாடல் திருஉத்தரகோசமங்கையில் பாடப்பெற்ற பாடலாகும். சிவாலயங்கள் அனைத்திலும் பள்ளியறை பூஜை சமயம் தினந்தோறும் பாடப்பட்டுவரும் ‘‘திருப்பொன்னூஞ்சல்’’ மாணிக்கவாசகரால் இவ் வாலயத்தில் வைத்து, இயற்றிப் பாடப்பெற்ற சிறப்பையும் பெற்றது.

மாணிக்கவாசகரால் பாடல் பெற்ற இத்தலம் அவரது திரு வாசகத்தில் 38 இடங்களில் சிறப்புறப் புகழப்பட்டுள்ளது.

Tags:    

Similar News