செய்திகள்
கோப்புபடம்.

தண்ணீரால் சம்பளத்தை இழக்கும் திருப்பூர் பெண் தொழிலாளர்கள்-சீராக விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?

Published On 2021-08-30 08:16 GMT   |   Update On 2021-08-30 08:16 GMT
வயலில் நாற்று நடுதல்,அறுவடை செய்தல், பெட்டிக்கடைகளில் அமர்ந்து பணிபுரிதல் போன்ற பணிகளிலும் தங்களை பெண்கள் ஈடுபடுத்திக்கொள்கின்றனர்.
திருப்பூர்:

திருப்பூர் போன்ற ஆண், பெண் இருபாலரும் உழைப்பை நாடிச்செல்லும் நகரங்களில் பெண்களின் உழைப்பு என்பது ஈடு இணையற்றது. குடிநீர் வினியோகத்தில் நிச்சயமின்மை, குளறுபடி, குடிநீரே கிடைக்காமை போன்றவை அவர்கள் வேலைக்கு செல்வதில் தடையை ஏற்படுத்துகிறது. தண்ணீர் பிடிப்பதற்காக விடுமுறை எடுக்க வேண்டிய சூழல் உள்ளது.

தண்ணீர் வரும் என்று காத்திருந்து தண்ணீர் வராமல் அடுத்த நாளும் பணிக்கு வராத சூழல்கள் ஏற்படுகின்றன. இது எளிய பிரச்சினை போல் தோன்றினாலும் இது ஏற்படுத்தும் பாதிப்புகள் அதிகம்.

தண்ணீர் பிடிக்க விடுமுறை எடுக்கவில்லை என்றால் தண்ணீர் பிடிக்க முடியாது. விலைக்கு வாங்க வேண்டுமென்றால் அதுக்கு 2, 3 நாட்கள் சம்பளம் தேவைப்படும் என்று கூறுகிறார் பனியன் நிறுவன பணிக்கு செல்லும் ஒரு பெண்மணி. இல்லத்தரசிகளுக்கு ஊதியம் என்று தேர்தலின்போது கட்சிகள் வாக்குறுதி அளித்தனர். 

இல்லத்தரசிகளுக்கு தேவையான வசதிகளையும், வாய்ப்புகளையும் வழங்குவதற்கேற்ப அடிப்படை வசதிகளை ஏற்படுத்தினால் போதும் என்பதே முக்கியம். ஒரு நாளில் பெண்கள் 352 நிமிடம் ஊதியம் இல்லாத வீட்டுப்பணியில் ஈடுபடுகின்றனர். ஆண்களோ 52 நிமிடம் மட்டும் ஒதுக்குகிறார்கள் என புள்ளிவிவரம் கூறுகிறது.

கொரோனா முடக்கத்தின்போது பெண்களுக்கு இன்னும் இந்த சுமை கூடியது. வீடுகளில் சமையல் வேலை, பாத்திரம் கழுவுதல், வீட்டை சுத்தம் செய்தல் என்பதோடு கிராமப்புறங்களில் வீடுகளில் கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுகின்றனர். வயலில் நாற்று நடுதல், அறுவடை செய்தல், பெட்டிக்கடைகளில் அமர்ந்து பணிபுரிதல் போன்ற பணிகளிலும் தங்களை பெண்கள் ஈடுபடுத்திக்கொள்கின்றனர்.

வீட்டு வேலைகளிலேயே அதிக நேரம் செலவிடுவதால் ஓய்வெடுத்தல், உடல் நலம் கவனித்தல், பொழுதுபோக்கு போன்றவற்றுக்கு அவர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை. சுய முன்னேற்றம், திறன் மேம்பாடு, தேவையான கல்வி, தொழிற்பயிற்சி போன்றவை கிடைப்பதில்லை.

நேரமின்மை காரணமாக பொது நிகழ்வுகளில் பங்கேற்க முடிவதில்லை. எனவே வீடுகளுக்கே நேரடி குடிநீர் இணைப்பு என்பது பெண்களின் நேரத்தை பொன்னாக்குவதற்கான வாய்ப்பை தரும். அதற்கேற்ப தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News