செய்திகள்

தமிழ்நாட்டில் அனல் பறந்த தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது - பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஒரு லட்சம் போலீசார்

Published On 2019-04-16 12:31 GMT   |   Update On 2019-04-16 12:37 GMT
ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறும் 39 பாராளுமன்ற தொகுதி தேர்தல், 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. #LoksabhaElections2019
சென்னை:

தமிழகம் - புதுவையில் 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (18-ந்தேதி) தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் அன்றைய தினம் நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, கமல்ஹாசன் கட்சி, டி.டி.வி.தினகரன் கட்சி, சீமான் கட்சிகளிடையே 5 முனை போட்டி நிலவுகிறது.

கடந்த மார்ச் மாதம் 10-ந் தேதி தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. உடனேயே அனைத்து அரசியல் கட்சியினரும் பிரசாரத்தை தொடங்கினர்.

முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விஜயகாந்தின் மனைவி பிரேமலதா ஆகியோர் அ.தி.மு.க- பா.ஜனதா, கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டனர்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் மட்டும் நேற்று பிரசாரம் செய்தார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியை ஆதரித்து தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். கம்யூனிஸ்டு தலைவர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.



தேர்தல் பிரசாரத்தின் போது எடப்பாடி பழனிசாமியும், மு.க.ஸ்டாலினும் வார்த்தைகளால் கடுமையாக மோதிக் கொண்டனர். இதனால் தேர்தல் களத்தில் அனல் பறந்தது.



பிரதமர் நரேந்திரமோடி தேர்தல் பிரசாரத்திற்காக 6 முறை தமிழகம் வந்தார். பா.ஜனதா மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பேசினார். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் தமிழகத்தில் பிரசாரம் செய்தார்.

இப்படி அகில இந்திய தலைவர்களின் தேர்தல் பிரசாரத்தாலும் தமிழக தேர்தல் களத்தில் அனல் பறந்தது.

சுமார் ஒரு மாதமாக தலைவர்கள் சூறாவளி சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு ஆதரவு திரட்டினர். இந்த பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.

நாளை (17-ந்தேதி) எந்த தேர்தல் பணியிலும் அரசியல் கட்சியினர் ஈடுபட கூடாது. வாக்காளர்களுக்கு பூத்-சிலிப் கொடுக்கும் பணி நாளை தீவிரமாக நடைபெறும்.

நாளை மறுநாள் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். மதுரையில் சித்திரை திருவிழா நடைபெறுவதால் அங்கு மட்டும் இரவு 8 மணி வரை பொதுமக்கள் ஓட்டுப்போடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. பாராளுமன்ற தேர்தலில் 845 வேட்பாளர்களும், சட்ட சபை தொகுதிகளில் 269 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.

தேர்தலில் 5.99 கோடி வாக்காளர்கள் ஓட்டுப்போட தகுதியானவர்கள் என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 100 சதவீத ஓட்டுப்பதிவு என்கிற இலக்கை எட்டுவோம் என்று மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

இன்று மாலை பிரசாரம் முடிவடைந்தவுடன் தொகுதிகளில் தங்கியுள்ள வெளி ஆட்கள் அனைவரும் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்றும், இதை மீறி தங்கி இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

ஓட்டுப்பதிவின்போது அசம்பாவிதங்கள் நடைபெற்று விடக்கூடாது என்பதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 160 கம்பெனி துணை ராணுவப் படையினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர். ஒரு கம்பெனியில் 100 பேர் வரை இருப்பார்கள். இதன்மூலம் 16 ஆயிரம் துணை ராணுவப் படையினர் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள உள்ளனர்.

சென்னையில் மட்டும் 15 ஆயிரம் போலீசாரும், 20 கம்பெனி துணை ராணுவப்படையினரும் பாதுகாப்புக்காக குவிக்கப்படுகிறார்கள். #LoksabhaElections2019 #pollcampaign #pollcampaignends #campaignendsinTN
Tags:    

Similar News