செய்திகள்
கள்ளநோட்டு

கேரள கள்ளநோட்டு கும்பல் பதுங்கலா?- திண்டுக்கல் லாட்ஜூகளில் தனிப்படை போலீசார் அதிரடி சோதனை

Published On 2019-08-31 05:39 GMT   |   Update On 2019-08-31 05:39 GMT
கேரள கள்ளநோட்டு கும்பல் திண்டுக்கல்லில் பதுங்கியுள்ளனரா? என லாட்ஜூகளில் தனிப்படை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

திண்டுக்கல்:

கேரளாவில் கள்ள நோட்டுகள் தயாரித்து கோவை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் புழக்கத்தில் விடப்படுவதாக தேசிய புலனாய்வு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து பாலக்காட்டில் ஒருவரை கைது செய்து விசாரித்த போது இடுக்கி மாவட்டம் கட்டப்பணையைச் சேர்ந்த அலெக்ஸ் மற்றும் தாமஸ் ஆகியோர் பாலக்காட்டில் ரூ.500, ரூ.2000 நோட்டுகளை அச்சடித்து தமிழகத்தில் புழக்கத்தில் விடுவது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் வந்த தாமஸ் மற்றும் அலெக்ஸ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2.50 லட்சம் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.

மேலும் ஒட்டன்சத்திரம் மார்க்கெட், பழனி மற்றும் கொடைக்கானல் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்றதும் தெரிய வந்தது.

கொடைக்கானலில் அமர்ஷா என்ற கேரள வாலிபரை கைது செய்து அவரிடம் இருந்து ரூ.200 கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் போலீசார் முக்கிய இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதற்காக தனிப்படை போலீசார் திண்டுக்கல் பஸ்நிலையம், லாட்ஜூகளில் அதிரடி சோதனை நடத்தினர். சந்தேகப்படும்படியாக சுற்றித்திரியும் கேரள நபர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் லாட்ஜூகளில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News