செய்திகள்
விஜய் வசந்த் எம்.பி.

நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்கும்- விஜய் வசந்த் பேச்சு

Published On 2021-09-18 10:32 GMT   |   Update On 2021-09-18 10:32 GMT
பொதுத்துறைகளின் சொத்துக்களை தனியாருக்கு விற்கும் மத்திய அரசின் நடவடிக்கையால் நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்கும் என கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் விஜய் வசந்த் கூறினார்.
நாகர்கோவில்:
   
பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு இன்று காலை எஸ். ஆர் இ. எஸ், என். எஃப். ஐ .ஆர், ஐ.என்.டி.யு.சி ஆகிய தொழிற்சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தொழிற்சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மத்திய அரசு 6 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள ரெயில்வே உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை விற்கும் நடவடிக்கையால் இந்தியாவில் வேலை இழப்பு அதிகரிக்கும். இதேபோன்று 15 ரெயில்வே விளையாட்டு மைதானங்களை விற்பதையும் மத்திய அரசு கைவிட வேண்டும். இது போன்ற பல்வேறு நடவடிக்கைகளால் ஊக்கத் தொகைகள் கிடைக்காமல் போக வாய்ப்பு உள்ளது.

எதிர்க்கட்சிகளின் கருத்துக்களை கேட்காமல் மத்திய அரசு தன்னிச்சையாக எடுத்து வரும் நடவடிக்கைகளால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா தீவிரமடைந்துள்ள நிலையிலும் கூட பெட்ரோல், டீசல்  விலையை உயர்த்தி பொதுமக்களை மத்திய அரசு பழி வாங்கி வருகிறது. 60 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சி செய்த போது எந்த பிரச்சனையும் இல்லாத நிலையில் தற்போது பாஜக ஆட்சியால் பொதுமக்கள் கடும் இன்னலை சந்தித்து வருகின்றனர் என அவர் கூறினார்.
Tags:    

Similar News