செய்திகள்
கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொரோனா தடுப்பூசி போட வந்த பொது மக்கள் கூட்டத்தை படத்தில் காணலாம்.

கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி போட குவிந்த பொதுமக்கள்

Published On 2021-05-16 18:19 GMT   |   Update On 2021-05-16 18:19 GMT
கொரோனா வைரஸ் அச்சத்தால் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் தடுப்பூசி போட பொதுமக்கள் குவிந்தனர். கோவாக்சினுக்கு நிலவும் தட்டுப்பாடால் பலர் திரும்பி சென்றனர்
கடலூர்:

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. கடலூர் மாவட்டத்திலும் தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. அதேவேளையில் கொரோனாவை தடுக்கும் ஓர் ஆயுதமாக இருக்கும் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள மக்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதனால் மாவட்டத்தில் உள்ள தடுப்பூசி போடும் மையங்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வருகிறது.

அந்த வகையில் தடுப்பூசி போட்டு கொள்வதற்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று காலை 8 மணிக்கே பொதுமக்கள் குவிய தொடங்கினர். பின்னர் அவர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து ஆஸ்பத்திரி வளாகத்தில் அமர வைக்கப்பட்டனர்.

தொடர்ந்து செவிலியர்கள், பொதுமக்களிடம் ஆதார் அட்டை எண் பெற்றுக்கொண்டு அவர்களது விருப்பத்திற்கேற்ப கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பு மருந்து போட்டனர்.

இதில் கோவாக்சின் தடுப்பு மருந்து குறைந்தளவே இருந்ததால், இரண்டாவது தவணை செலுத்த வந்தவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டது. முதல் தவணை தடுப்பூசி போட வந்தவர்களை ஆஸ்பத்திரி ஊழியர்கள் திருப்பி அனுப்பினர். இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

நேற்று மதியம்வரை மட்டும் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் 300-க்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இதேபோல் மாவட்டம் முழுவதும் 6 தனியார் மருத்துவமனைகள், 80 அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களின் மூலம் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 74 ஆயிரத்து 17 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்.
Tags:    

Similar News