செய்திகள்
பணம் மோசடியில் ஈடுபட்ட தம்பதி

'சதுரங்க வேட்டை' சினிமா பாணியில் ரூ.2 கோடி சுருட்டிய மோசடி தம்பதி

Published On 2021-08-06 09:35 GMT   |   Update On 2021-08-06 09:35 GMT
மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பாலமுருகன் மற்றும் இந்திரா பானுமதி ஆகிய 2 பேரை கைது செய்தனர். தப்பி ஓடிய மேலும் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
மதுரை:

மதுரை பெத்தானியா புரத்தைச் சேர்ந்த ஈஸ்வரி என்பவர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மதுரையை சேர்ந்த பாலமுருகன், இந்திரா பானுமதி, விஸ்வா, ஹரிகரன் ஆகிய 4 பேர் பெத்தானியாபுரத்தில் “பாரத மாதா நிதி நிறுவனம்“ நடத்தி வருகின்றனர். இவர்களில் பாலமுருகன்- இந்திரா பானுமதி ஆகிய 2 பேரும் கணவன்-மனைவி ஆவர்.

இந்த நிலையில் அவர்கள் எங்கள் நிறுவனத்தில் குறைந்த விலைக்கு ஆயுர்வேத பொருட்களை வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்யலாம் என்ற அறிவிப்பு வெளியிட்டிருந்தனர். எனவே நான் உள்பட பலர் அங்கு சென்றோம்.

அப்போது அவர்கள் எங்களிடம் முகவராக விரும்புவோர் குறிப்பிட்ட தொகையை முதலீடாக செலுத்த வேண்டும். உங்களின் தொகையில் 75 சதவீதம் மதிப்பு உடைய பொருட்கள் வழங்கப்படும்.

நீங்கள் இந்த தொழிலில் மேலும் ஒருவரை சேர்த்துவிட்டால் அதற்காக உங்களுக்கு 20 சதவீதத்திற்கும் மேல் கமி‌ஷன் வழங்கப்படும். எங்கள் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கும் சேர்த்து விடுபவர்களுக்கும் கமி‌ஷன் தொகை கூடுதலாக வழங்கப்படும்.

நீங்கள் குறைந்தபட்சம் 20 பேரை சேர்த்து விட்டால் அதன் பிறகு நீங்கள் வேலைக்கு செல்ல வேண்டியது இல்லை. வீட்டில் உட்கார்ந்து கொண்டே சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தைகள் கூறினர்.

இதனை நம்பிய நான் அவர்களின் நிறுவனத்தில் 100-க்கும் மேற்பட்டோரை சேர்த்துவிட்டுள்ளேன். இந்த நிலையில் அந்த நிறுவனத்திலிருந்து எங்களுக்கு வரவேண்டிய கமி‌ஷன் தொகை வரவில்லை.

எனவே நாங்கள் இதுபற்றி கேட்டபோது சாக்குப்போக்கு சொல்லி இழுத்தடித்து வந்தனர். ஒரு கட்டத்தில் மேற்கண்ட 4 பேரும் எங்களுக்கு உரிய தொகையை வழங்க முடியாது என்று தெரிவித்னர். எனவே போலீசார் இது தொடர்பாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இதனடிப்படையில் போலீஸ் டி.எஸ்.பி. அறிவழகன் தலைமையில் போலீசார் இருதரப்பிலும் விசாரணை நடத்தினர். அப்போது பாரத மாதா நிதி நிறுவனத்தை சேர்ந்த பாலமுருகன், இந்திரா பானுமதி, விஸ்வா, ஹரிஹரன் ஆகிய 4 பேர் ரூ.2 கோடிக்கு மேல் மோசடி செய்தது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பாலமுருகன் மற்றும் இந்திரா பானுமதி ஆகிய 2 பேரை கைது செய்தனர். தப்பி ஓடிய மேலும் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மதுரையில் சதுரங்க வேட்டை சினிமா பாணியில் ரூ.2 கோடி மோசடி சம்பவம் அரங்கேற்றியது மாநகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News