செய்திகள்
கிரேன் மூலம் லாரியில் ஏற்றி வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்ட போது எடுத்த படம்.

மயக்க ஊசி செலுத்தி பிடிபட்ட ஒற்றை யானை முதுமலைக்கு கொண்டு செல்லப்பட்டது - கிராம மக்கள் நிம்மதி

Published On 2021-04-08 10:39 GMT   |   Update On 2021-04-08 10:39 GMT
ஏரியூர் அருகே, கடந்த 20 நாட்களாக மக்களை அச்சுறுத்தி வந்த, ஒற்றை யானையை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர்.

ஏரியூர்:

தருமபுரி மாவட்டம், ஏரியூர் அடுத்த நெருப்பூர் அருகே உள்ள வனப்பகுதியில் கடந்த 20 நாட்களாக ஒற்றை காட்டு யானை, பொதுமக்களையும், விவசாய நிலங்களையும் மற்றும் கால்நடைகளை அச்சுறுத்தியும் தாக்கியும் வந்தது.

அந்த ஒற்றை யானையை வனப்பகுதிக்கு துரத்தி விடுவதற்காக வனத்துறையினரும், பொதுமக்களும் 20 நாட்களாக போராடி வந்தனர்.

இந்த நிலையில் வனப்பகுதிக்கு செல்ல மறுத்து காவிரிக்கரையோர பகுதிகளில் சுற்றித்திரிந்து வந்தது. விவசாய நிலங்களை சேதப்படுத்தியும் ஆடு- மாடு உள்ளிட்ட கால்நடைகளை தாக்கியும் வந்தது.

இந்த நிலையில் யானையை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட, பட்டாசுகள் வெடித்தும், சத்தம் எழுப்பியும் விரட்ட வனத்துறையினர் முயற்சி செய்தனர். ஆனால் வனத்துறையினரின் எந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை.

அதன் தொடர்ச்சியாக யானையை நேற்று மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் தலைமையிலான 10-க்கும் மேற்பட்ட, வனத்துறையினர் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடிவு செய்தனர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு யானைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. சிறிது நேரத்தில் மயங்கி கீழ் விழுந்த யானையை கிரேன் மூலம் மீட்டு ராட்சத பெல்ட்டால் கட்டப்பட்டு லாரியில் ஏற்றப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக பிடிப்பட்ட யானையை முதுமலை வனப்பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு அடர்த்தியான வனப்பகுதியில் விடப்பட்டது. கடந்த 20 நாட்களாக அட்டகாசம் செய்த ஒற்றை யானை பிடிபட்டு வனப்பகுதிக்குள் கொண்டு விடப்பட்டதால் கிராம மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News