செய்திகள்
கைது

சிவகங்கை ரவுடி கொலையில் 4 பேர் கைது

Published On 2019-09-09 09:28 GMT   |   Update On 2019-09-09 09:28 GMT
சிவகங்கை ரவுடி கொலையில் 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகங்கை:

சிவகங்கை மாவட்டம் பனங்காடி கிராமத்தைச் சேர்ந்தவர் காளையப்பன். இவரது மகன் ராஜசேகர் (வயது 38). இவர் மீது சிவகங்கை, மதுரை போலீஸ் நிலையங்களில் கொலை, கொள்ளை, மிரட்டுதல் உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.

கடந்த 6-ந்தேதி சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பாக அஜரானார். பின்னர் அவர் ஊர் திரும்பியபோது அவரை சுற்றிவளைத்த கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டியது.

இதில் படுகாயம் அடைந்த ராஜசேகர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக சிவகங்கை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

கொலையாளிகளை பிடிக்க டி.எஸ்.பி. அப்துல் காதர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்த நிலையில் ராஜசேகர் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் மேலூர், காளையார்கோவில் அருகே உள்ள பையூர் பகுதிகளில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் மேலூர், பையூர் பகுதிகளில் தீவிர சோதனை நடத்தி 4 பேரை கைது செய்தனர்.

கைதானவர்கள் திருப்புவனம் அருகே உள்ள கொத்தங்குளத்தைச் சேர்ந்த ஜெய்சிங் மகன் விக்கி (27), முருகன் மகன் மணி அருள்நாதன் (27), காளையார்கோவில் பகுதி யைச்சேர்ந்த சண்முகம் மகன் சரவணன் (35), பாலுச்சாமி மகன் தென்னரசு (24) ஆவார்கள்.

இவர்கள் 4 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். தொழில் போட்டி காரணமாக ராஜசேகர் கொலை செய்யப்பட்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

Tags:    

Similar News