செய்திகள்
லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

பேரூராட்சி செயல் அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

Published On 2020-09-16 12:15 GMT   |   Update On 2020-09-16 12:15 GMT
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின்பேரில் பேரூராட்சி செயல் அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று திடீர் சோதனை நடத்தினர்.

உத்தமபாளையம்:

தேனி மாவட்டம் உத்தமபாளையம் பி.டி.ஆர் பண்ணை வீதியில் வசித்து வருபவர் பாலசுப்பிரமணி(40). இவர் தற்போது திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் பேரூராட்சி செயல் அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டிற்கு இன்று காலை லஞ்சஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில் 7 பேர் கொண்ட போலீசார் வந்தனர்.

வீட்டிற்குள் வந்ததும் உள்புறமாக கதவை பூட்டி செல்போன்கள் அனைத்தையும் வாங்கி வைத்துக்கொண்டனர். பின்னர் வீட்டில் இருந்த பணம், நகை, சொத்து ஆவணங்கள் ஆகியவை குறித்து விசாரணை நடத்தினர். பாலசுப்பிரமணி, அவரது மனைவி, மற்றும் உறவினர்கள் பெயரில் உள்ள வங்கிகணக்கு விபரம், கடந்த சில மாதங்களில் இவரது கணக்கில் பணம் செலுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் ஆகியவற்றையும் சேகரித்து வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் தெரிவிக்கையில், பாலசுப்பிரமணி ஆண்டிப்பட்டி, தேவாரம், குச்சனூர், பண்ணைப்புரம் உள்ளிட்ட பல்வேறு பேரூராட்சிகளில் செயல் அலுவலராக பணிபுரிந்து தற்போது அய்யம்பாளையத்தில் பணியில் உள்ளார். இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடர்ந்து போலீசாருக்கு புகார்கள் வந்தவண்ணம் இருந்தது.

அதன்பேரில் தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணைக்கு பிறகு அதுகுறித்த முழுவிபரங்கள் தெரியவரும் என்றனர். செயல்அலுவலர் வீட்டில் லஞ்சஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்திய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News