செய்திகள்
பீட்சா

திருமணத்திற்கு மறுத்த பெண்ணுக்கு ‘பீட்சா’ ஆர்டர் செய்து தொல்லை

Published On 2021-08-26 03:26 GMT   |   Update On 2021-08-26 03:26 GMT
பெங்களூருவில் திருமணத்திற்கு மறுத்த பெண்ணின் பெயரில் பீட்சா ஆர்டர் செய்து தொல்லை கொடுத்து வரும் மர்மநபர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
பெங்களூரு :

பெங்களூரு எலகங்கா நியூ டவுன் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 36 வயது பெண் வசித்து வருகிறார். இவர் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு நபர், பெண் பயன்படுத்தி வரும் சமூக வலைத்தளங்களுக்கு ஒரு குறுந்தகவல் அனுப்பினார். அதில் உங்களை திருமணம் செய்ய விரும்புவதாக கூறி இருந்தார். ஆனால் அந்த பெண் திருமணத்திற்கு மறுத்து விட்டார்.

இந்த நிலையில் அந்த பெண் வீட்டில் இருந்தார். அப்போது அவரது வீட்டிற்கு பீட்சா எடுத்து கொண்டு ஒரு ஊழியர் வந்தார். ஆனால் அந்த பெண், தான் பீட்சா ஆர்டர் செய்யவில்லை என்று கூறி இருந்தார். ஆனாலும் அந்த பெண்ணின் பெயரில் தான் பீட்சா ஆர்டர் செய்யப்பட்டு இருந்தது. இதனால் அந்த பெண் பணம் கொடுத்து பீட்சாவை பெற்று கொண்டார்.

இதனை தொடர்ந்து பெண்ணின் வீட்டிற்கும், அவர் பணியாற்றி வரும் அலுவலகத்திற்கும் தொடர்ந்து பெண்ணின் பெயரில் பீட்சா வந்தது. இந்த நிலையில் பெண்ணின் சமூக வலைத்தளங்களுக்கு குறுந்தகவல் அனுப்பிய மர்மநபர், நான் தான் உங்கள் பெயரில் பீட்சா ஆர்டர் செய்து அனுப்பி வைக்கிறேன். நீங்கள் திருமணத்திற்கு ஒப்பு கொள்ளவில்லை என்றால் தொடர்ந்து உங்கள் பெயரில் பீட்சாவை ஆர்டர் செய்து தொல்லை கொடுப்பேன் என்று கூறியதுடன், நீங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் உங்களை கண்காணிக்க கோரமங்களாவை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் மூலம் ஆட்களை நியமித்து உள்ளேன் என்று கூறி இருந்ததாக தெரிகிறது.

இதனால் பயந்து போன பெண் அந்த மர்மநபர் மீது எலகங்கா நியூ டவுன் போலீசில் புகார் அளித்து உள்ளார். மேலும் அந்த புகாரில் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் கூறி உள்ளார். அந்த புகாரின்பேரில் போலீசார் மர்மநபர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
Tags:    

Similar News