செய்திகள்
உச்ச நீதிமன்றம்

சபரிமலை, ரபேல் வழக்குகளில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்ச நீதிமன்றம்

Published On 2019-11-13 07:21 GMT   |   Update On 2019-11-13 07:21 GMT
சபரிமலை தீர்ப்பு, ரபேல் விவகாரம் உள்ளிட்ட 3 முக்கிய வழக்குகளில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது.
புதுடெல்லி:

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வரும் 17-ம் தேதியுடன் ஓய்வு பெற உள்ளார். இந்நிலையில், பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த அயோத்தி நில வழக்கில் தலைமை நீதிபதி  ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கிவிட்டது. 

தலைமை நீதிபதி ஓய்வு பெற இன்னும் ஒருசில நாட்களே இருப்பதால், அதற்கு முன் அவர் தலைமையிலான அமர்வில் உள்ள 3 முக்கிய வழக்குகளில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை உச்ச நீதிமன்றமே திருடன் என கூறிவிட்டதாக ராகுல் பேசியிருந்தார். ராகுல்  பேசியதற்கு எதிராக பாஜக எம்பி மீனாட்சி லேகி தொடர்ந்த வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி அமர்வில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடு தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த டிசம்பர் 14-ம் தேதி தீர்ப்பு வழங்கியிருந்தது. அதில், ரபேல் போர் விமான ஒப்பந்த நடைமுறையில் முறைகேடுகள் நடந்ததாக கூறுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என கூறியது. இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, நாளை தீர்ப்பு வழங்க உள்ளது.

இதேபோல் சபரிமலை மறுசீராய்வு மனு மீதும் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதித்து உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட சீராய்வு மனு மீது நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. 
Tags:    

Similar News