செய்திகள்

மோடியின் ஆதரவு பேச்சு: பலுகிஸ்தான் தலைவர்களுக்கு பாகிஸ்தான் அழைப்பு

Published On 2016-08-16 05:38 GMT   |   Update On 2016-08-16 05:38 GMT
மோடியின் ஆதரவு பேச்சை தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த வருமாறு பலுகிஸ்தான் தலைவர்களுக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது.

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் உள்ள பலுகிஸ்தான் பகுதி தாது வளம் மிகுந்தது. இருந்தாலும் அங்கு வளர்ச்சி எதுவும் இன்றி மிகவும் பின் தங்கியுள்ளது. அப்பகுதியை பாகிஸ்தான் அரசு வளர்ச்சி அடைய விடாமல் தடுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எனவே தங்களுக்கு சுதந்திரம் வேண்டும் என அப்பகுதிமக்கள் போராடி வருகின்றனர். அவர்களின் போராட்டத்தை பாகிஸ்தான் அரசு அடக்கி ஒடுக்கி வருகிறது. பல தலைவர்களை நாடு கடத்தியுள்ளது.

இந்த நிலையில் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பலுகிஸ்தானில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன. அங்கு உரிமைகளுக்காக போராடும் தலைவர்களுக்கு இந்தியா ஆதரவு அளிக்கும் என பிரதமர் மோடி சமீபத்தில் தெரிவித்தார். தனது சுதந்திர தின உரையிலும் வெளிப்படுத்தினார்.

இதற்கு பலுகிஸ்தானில் உரிமைகளுக்காக போராடும் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்தனர். இந்தியாவின் ஆதரவு கிடைத்ததால் அங்கு வாழும் மக்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இது பாகிஸ்தானை கலக்கமடைய செய்துள்ளது. எனவே, தனது நிலையில் இருந்து இறங்கியுள்ளது.

பலுகிஸ்தான் பிரச்சினையை பேசி தீர்த்து கொள்ள முடிவு செய்துள்ளது. அதற்காக நாடு கடத்தப்பட்ட போராட்ட குழு தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

பலுகிஸ்தான் முதல்- மந்திரி நவாப் சனானுல்லா ஷெக்ரி, ராணுவ தென்பகுதி கமாண்டர் லெப்டி னென்ட் ஜெனரல் அமிர்ரியாஷ் ஆகியோர் நேற்று இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

நாடு கடத்தப்பட்ட தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்த மீண்டும் பாகிஸ்தான் வாருங்கள்.

தேசிய அரசியலில் பங்கு பெறுங்கள். தேர்தலில் போட்டியிட்டு மக்கள் தேர்ந்தெடுத்தால் உங்களை வரவேற்கிறோம் என தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே பிரதமர் மோடியின் பலுகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஆதரவு பேச்சுக்கு பாகிஸ்தான் வெளியுறவு துறை ஆலோசகர் சர்தாஷ் அசிஷ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Similar News