செய்திகள்
சுப்ரீம் கோர்ட்

உண்மையை மறைக்க முயற்சித்த குஜராத் அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்

Published On 2020-12-01 21:03 GMT   |   Update On 2020-12-01 21:03 GMT
கொரோனா மருத்துவமனை தீ விபத்து விவகாரத்தில் உண்மையை மறைக்க முயற்சித்த குஜராத் அரசை சுப்ரீம் கோர்ட்டு கண்டித்துள்ளது.
புதுடெல்லி:

கொரோனா மருத்துவமனை தீ விபத்து விவகாரத்தில் உண்மையை மறைக்க முயற்சித்த குஜராத் அரசை சுப்ரீம் கோர்ட்டு கண்டித்துள்ளது.
நோயாளிகளுக்கான முறையான சிகிச்சை, இறந்துபோன கொரோனா நோயாளிகளின் உடல்களை கண்ணியமாக கையாளுதல், அடக்கம் செய்தல் தொடர்பாக தானாக முன்வந்து பதிவு செய்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

இதனிடையே, குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் கொரோனா மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பலியான விவகாரத்தையும் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது.

கடந்த விசாரணையின்போது, நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்தும், கொரோனா பாதிப்பு சூழல் நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. உறுதியான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்கவில்லை என்றும், பேரணிகளும், ஊர்வலங்களும் நடைபெறுகின்றன. அவற்றில் பங்கேற்கும் 80 சதவீதம் பேர் முக கவசம் அணிவதில்லை என்றும் கவலையை வெளியிட்டது. மேலும் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் கொரோனா மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பலியான விவகாரம் தொடர்பாக பதில் அளிக்க உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நேற்று விசாரணை நடைபெற்றது.

அப்போது நீதிபதிகள், குஜராத் அரசின் பிரமாண பத்திரம் பல்வேறு முரண்பாடுகளுடன் உள்ளது. உண்மையை மறைக்க யாரும் முயற்சி செய்யக்கூடாது என கண்டித்ததுடன், ராஜ்கோட் தீ விபத்து தொடர்பாக உண்மை வெளிவர வேண்டும் என தெரிவித்தனர்.

அப்போது சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ராஜ்கோட் தீ விபத்து தொடர்பாக நீதிபதி டி.கே.மேத்தா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழு விசாரித்து வருகிறது என வாதிட்டார்.

இதற்கு நீதிபதிகள், “அது சரி, ஆமதாபாத்தில் 7 பேர் பலியானார்களே அந்த விவகாரம் என்ன ஆனது?” என கேட்டனர்.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக புதிய பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய குஜராத் அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வியாழக்கிழமைக்கு தள்ளிவைத்தனர்.
Tags:    

Similar News