செய்திகள்

திரிபுரா, மேகாலயா, நாகாலாந்தில் ஆட்சியை பிடிப்பது யார்?

Published On 2018-03-02 21:15 GMT   |   Update On 2018-03-02 21:15 GMT
திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களுக்கு நடந்த சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் பலத்த பாதுகாப்புடன் இன்று(சனிக்கிழமை) எண்ணப்படுகிறது. #Nagaland #Meghalaya #Tripura
அகர்தலா:

திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களுக்கு நடந்த சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் பலத்த பாதுகாப்புடன் இன்று(சனிக்கிழமை) எண்ணப்படுகிறது.

தலா 60 உறுப்பினர்களை கொண்ட திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 வடகிழக்கு மாநில சட்டசபைகளின் ஆயுட்காலம் முடிவடைவதையொட்டி தேர்தல் கமிஷன் தேர்தலை நடத்த முடிவு செய்தது. இதையடுத்து திரிபுராவில் கடந்த 18-ந்தேதி தேர்தல் நடத்தப்பட்டது. அங்கு 74 சதவீத ஓட்டுகள் பதிவாகின.



மேகாலயா மற்றும் நாகாலாந்து மாநிலங்களில் கடந்த 27-ந்தேதி தேர்தல் நடந்தது. இதில் மேகாலயாவில் 67 சதவீதமும், நாகாலாந்தில் 75 சதவீதமும் ஓட்டுகள் பதிவானது.

இந்த 3 மாநிலங்களிலும் தலா 59 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடந்தது. திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் ஒருவர் மரணம் அடைந்ததால் அங்கு ஒரு தொகுதியில் தேர்தல் நடைபெறவில்லை. மேகாலயாவில் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் கொல்லப்பட்டதால் ஒரு தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

நாகாலாந்தை பொறுத்தவரை வடக்கு அங்காமி-2 தொகுதியில் போட்டியிட்ட தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி தலைவர் நெய்பியூ ரியோ போட்டியின்றி வெற்றி பெற்றுவிட்டதால் எஞ்சிய 59 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது.

அண்மைக்காலமாக வட கிழக்கு மாநிலங்களில் பா.ஜனதாவின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. அசாம், மணிப்பூர், அருணாசலபிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் ஆட்சியை அக்கட்சி கைப்பற்றியதால் தற்போது தேர்தல் நடந்து முடிந்துள்ள 3 மாநிலங்களிலும் பா.ஜனதாவும் அதன் கூட்டணியும் வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.

மேகாலயாவில் கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சியில் இருந்து வரும் காங்கிரஸ் இந்த முறை பா.ஜனதாவுடன் கடும் போட்டியை சந்திக்கிறது.

நாகாலாந்தில் ஆளும் நாகா மக்கள் முன்னணிக்கும், தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சியின் தலைமையில் அமைந்த பா.ஜனதா கூட்டணிக்கும் இடையேதான் பலத்த போட்டி நிலவுகிறது. 1963-ம் ஆண்டு முதல் இந்த மாநிலத்தில் 3 முதல்-மந்திரிகளை தந்த காங்கிரஸ் வெறும் 18 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகிறது. இது பா.ஜனதாவை விட 2 தொகுதிகள் குறைவாகும்.

திரிபுராவில் மாணிக் சர்க்கார் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு இம்முறை பா.ஜனதா கடும் சவாலாக திகழ்கிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் திரிபுராவில் பா.ஜனதா ஆட்சியை கைப்பற்றும் என்று கூறப்படுவதால் இந்த மாநிலத்தின் தேர்தல் முடிவுகள் நாடு முழுவதும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்புடன் ஓட்டு எண்ணிக்கை இன்று(சனிக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

3 மாநில சட்டசபை தொகுதிகளும் குறைவான வாக்காளர்களை கொண்டவை என்பதால் பகல் 11 மணிக்கு உள்ளாகவே இறுதி நிலவரம் தெரிய வந்துவிடும்.  #Nagaland #Meghalaya #Tripura #tamilnews
Tags:    

Similar News