செய்திகள்
வாகன சோதனையில் பணம் பறிமுதல்

திண்டிவனம் அருகே பறக்கும் படை வாகன சோதனையில் ரூ.9 லட்சம் சிக்கியது

Published On 2019-10-08 07:21 GMT   |   Update On 2019-10-08 07:21 GMT
திண்டிவனம் அருகே பறக்கும் படை வாகன சோதனையில் ரூ.9 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

திண்டிவனம்:

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு வருகிற 21-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதையொட்டி மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுபொருட்கள் கொடுப்பதை தடுக்க மாவட்டம் முழுவதும் 39 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நிலைகண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

பறக்கும் படையினர் ஆங்காங்கே வாகனங்களை மறித்து அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று அதிகாலை திண்டிவனம் அருகே சலவாதி என்ற இடத்தில் பறக்கும் படை அதிகாரி சரவணன் தலைமையில் போலீசார் அந்த வழியாக வந்த வாகனங்களை மறித்து சோதனை மேற்கொண்டனர்.

அப்போது கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து சென்னை நோக்கி கார் ஒன்று வேகமாக சென்றது. அந்த காரை பறக்கும் படையினர் மறித்து சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின்போது காருக்குள் கட்டுக்கட்டாக பணம் இருந்தது தெரியவந்தது. மொத்தம் ரூ.9 லட்சத்து 16 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து காரில் இருந்தவர்களிடம் பணம் கொண்டு செல்வதற்கான ஆவணங்களை கேட்டனர். அவர்கள் ஆவணங்கள் ஒன்றும் இல்லை என்றனர்.

இதைத்தொடர்ந்து காரில் கொண்டு சென்ற ரூ.9 லட்சத்து 16 ஆயிரத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை அவர்கள் திண்டிவனம் தாசில்தார் ரகோத்தமனிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News