செய்திகள்
மயக்கம் (கோப்பு படம்)

மஞ்சளுக்கு பதிலாக சாம்பாரில் சாணிபவுடர் கலந்து சாப்பிட்ட 6 குழந்தைகள் மயக்கம்

Published On 2019-07-08 10:56 GMT   |   Update On 2019-07-08 10:56 GMT
உணவு சமைத்து விளையாடிய போது மஞ்சளுக்கு பதிலாக சாம்பாரில் சாணிபவுடர் கலந்து சாப்பிட்ட 6 குழந்தைகளுக்கு கோவை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோவை:

கோவை தடாகம் அருகே உள்ள சோமையனூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் முருகன்.

இவரது மகள்கள் ஜீவிதா (வயது 13) லோகேஷ்வரி (11), அனுசியா (3),மகன் முகுந்தன் (7). பக்கத்து வீட்டை சேர்ந்த மகேந்திரன் என்பவரது மகள்கள் ஹரினி (13), யாஷினி (5) ஆகியோர் நேற்று பள்ளி விடுமுறை நாள் என்பதால் அனைவரும் வீட்டில் இருந்தனர்.அப்போது உணவு சமைத்து விளையாடலாம் என இவர்கள் திட்டமிட்டனர். அதன்படி தங்களது வீடுகளில் இருந்த அரிசி, பருப்பு, மசாலா பொருட்களை எடுத்து வந்து வீட்டின் அருகே உள்ள பகுதியில் உணவு சமைத்து விளையாடினர்.

சமைத்துக்கொண்டு இருந்த போது மஞ்சள் பொடிக்கு பதிலாக தெரியாமல் வீட்டில் இருந்த மஞ்சள் சாணிப்பவுடரை சாம்பாரில் போட்டுள்ளனர்.உணவு தயாரானதும் அனைவரும் மஞ்சள் சாணிப்பவுடர் குழம்பில் கலந்துள்ளது தெரியாமல் சாப்பிட்டனர்.

பின்னர் அனைவரும் சேர்ந்து விளையாடிக் கொண்டு இருந்தனர். சிறிது நேரத்தில் குழந்தைகள் ஒன்றன் பின் ஒன்றாக மயங்கி கீழே விழுந்தனர். அவர்களது வாயில் இருந்து நுரை தள்ளியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குழந்தைகளின் பெற்றோர் அவர்களை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.

அங்கு குழந்தைகளை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தைகள் மஞ்சள் சாணிப்புவுரை சாப்பிட்டுள்ளது தெரிய வந்தது. பின்னர் குழந்தைகளை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.இது குறித்து தடாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News