செய்திகள்
பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி வாக்குச்சாவடி மையத்தில் மனு வாங்கிச் சென்றதை காணலாம்

உள்ளாட்சி தேர்தல்- வேட்புமனு தாக்கலில் ஆர்வமில்லை

Published On 2021-10-12 02:41 GMT   |   Update On 2021-10-12 02:41 GMT
புதுவை உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
புதுச்சேரி:

புதுவையில் 3 கட்டமாக உள்ளாட்சி தேர்தலை நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி முதல்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.

புதுச்சேரி நகராட்சிக்கு பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்ட அலுவலகங்களிலும், உழவர்கரை நகராட்சிக்கு காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத்தில் அமைக்கப்பட்ட அலுவலகங்களிலும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் அங்கு தயார் நிலையில் இருந்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

தேர்தலில் போட்டியிட விரும்பி சிலர் மட்டுமே அலுவலகங்களுக்கு வந்து வேட்புமனுக்களை வாங்கிச் சென்றனர். முக்கிய அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் யாரும் வரவில்லை. அதேபோல் வேட்புமனு தாக்கல் செய்யவும் யாரும் வரவில்லை. இதனால் வேட்புமனு தாக்கல் நடக்கும் இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவரும், புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளருமான சிவா எம்.எல்.ஏ. தொடர்ந்த வழக்கில் தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்குமாறு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து மற்றவர்களும் மனுக்கள் வாங்குவதை நிறுத்திக்கொண்டனர்.
Tags:    

Similar News