செய்திகள்
காய்கறிகள்

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தால் காய்கறி விலை மேலும் உயரும் அபாயம்

Published On 2021-02-22 11:37 GMT   |   Update On 2021-02-22 11:37 GMT
பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டு இருப்பதால் காய்கறி விலை உயர்ந்துள்ளது. இந்த விலையேற்றம் மே வரை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் கூறியுள்ளனர்.
திருச்சி:

காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த ஜனவரி தொடக்கத்தில் பெய்த பருவம் தவறிய மழையால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டதோடு தோட்டக்கலை பயிர்களான சின்ன வெங்காயம் மற்றும் இதர காய்கறி செடிகளும் கடுமையாக பாதிக்கக்கப்பட்டன.

கத்திரிக்காய், வெண்டைக்காய் போன்ற செடிகளில் பூ வந்து காய்பிடிக்கும் நிலையில் மழை கொட்டியதால் அந்த பூக்கள் பெயர்ந்து விழுந்தன. சின்னவெங்காயம் தோட்டத்திலேயே அழுகியது. இதனால் பெரம்பலூர் வெங்காயம் வரத்து தடைபட்டது. மணப்பாறை கத்தரிக்காய் உற்பத்தி கடுமையாக சரிந்தது.

இதுபோன்ற காரணங்களால் தற்போது உள்ளூர் காய்கறிகளின் வரத்து கணிசமாக குறைந்து விலை உச்சம் தொட்டுள்ளது. இதற்கிடையே பெட்ரோல், டீசல் விலை நாளும் உயர்ந்து கொண்டு இருப்பதால் திருச்சி காந்தி மார்க்கெட்டுகளுக்கு காய்கறி கொண்டு வரும் செலவினமும் விவசாயிகளுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி காந்தி மார்க்கெட்டில் கறிவேப்பிலை, வெங்காயம், முருங்கைக்காய், வாழை இலை போன்றவற்றின் விலை கடந்த சில நாட்களாக பலமடங்கு உயர்ந்திருக்கிறது.

சின்ன வெங்காயம் கிலோ ரூ.100-க்கும், முருங்கைக்காய் ரூ.80-க்கும், கறிவேப்பிலை ரூ.85-க்கும் விற்பனை ஆகிறது. வாழை இலை வியாபாரி மதியழகன் கூறும்போது, 2 அடிநீள வாழை இலை வழக்கமாக குறைந்த பட்சம் 50 பைசாவில் இருந்து ரூ.2 வரை விலை நிர்ணயம் செய்யப்படும். ஆனால் தற்போது ரூ.5-க்கு விற்பனை செய்யப்படுகிறது. திருமண சீசனும் விலை உயர்வுக்கு ஒரு காரணமாக இருக்கிறது என்றார்.

வரத்து குறைந்து தேவை அதிகரித்துள்ளதால் இந்த விலையேற்றமானது அடுத்த அறுவடை சீசனான மே வரை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் கூறியுள்ளனர்.

திருச்சி மொத்த காய்கறி வியாபாரி ராஜா என்பவர் கூறும்போது, கறிவேப்பிலை, வெங்காயம், முருங்கைக்காய், வாழை இலை தவிர மற்ற காய்கறிகளின் விலை சீராக உள்ளது. மேற்கண்ட 4 பொருட்களின் விலையும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. வழக்கமாக இந்த காலகட்டத்தில் விலை பாதி அளவுக்கே இருக்கும். சில் லறை விற்பனை கடைகளில் கறிவேப்பிலை ரூ. 120-க்கும், வெங்காயம் ரூ.130-க்கும், முருங்கைக்காய் ரூ.120-க்கும் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

வரத்து குறைவு ஒருபக்கம் என்றால் இன்னொரு பக்கம் டீசல் விலை உயர்வால் லாரி வாடகையும் உயர்ந்து விட்டது. வரத்து குறைந்து விற்பனை மந்தமாகி விட்டதால் கொள்முதல் அளவும் குறைந்துள்ளது.

வழக்கமான நாட்களால் சென்னையில் இருந்து திருச்சிக்கு ஒரு லோடு காய்கறி கொண்டு லாரி வாடகையாக ரூ.3500 செலுத்தி வந்தோம். ஆனால் தற்போது ரூ. 4000 முதல் ரூ.4500 செலவாகிறது என கவலை தெரிவித்தார். இந்த வாடகைச்சுமை நுகர்வோரின் தலையில் விழுகிறது.

காய்கறி போக்குவரத்து வாகனங்களை இயக்கிவரும் செல்வமணி என்பவர் கூறும்போது, வாரத்தில் 4 முறை சென்னைக்கு காய்கறி லோடு ஏற்ற எனது வாகனங்கள் அனுப்பி வைக்கப்படும். இப்போது விற்பனை குறைந்துள்ளதால் வாரத்தில் 2 முறை மட்டுமே லாரி செல்கிறது என்றார்.

திருச்சி தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் விமலா கூறும்போது, பருவம் தவறிய மழையால் அறுவடை சுருங்கி விட்டது. இதற்கிடையே பூச்சிகளால் வாழை மற்றும் கறிவேப்பிலை பயிர்கள் பாதிக்கப்பட்டன. தற்போது நிலைமை சீரடைந்துள்ளது. அடுத்த கட்ட அறுவடை இன்னமும் 30 நாட்களில் தொடங்கி விடும் என்றார்.
Tags:    

Similar News