செய்திகள்

விவசாயி மகளுக்கு கல்விக்கடன் வழங்காமல் அலைக்கழித்த வங்கிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்

Published On 2018-02-24 04:01 GMT   |   Update On 2018-02-24 04:01 GMT
கல்விக்கடன் வழங்காமல் ஏழை விவசாயியின் மகளை அலைக்கழித்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
சென்னை:

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஏழை விவசாயியின் மகள் ஆர்.முத்தழகி. இவர் 2011-ம் ஆண்டு என்ஜினீயரிங் படிப்பில் சேர்ந்தார். முத்தழகி இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் திருவண்ணாமலை மாவட்டம், கேளூர் கிளை மேலாளரிடம் கல்விக்கடன் கேட்டு 2011-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி விண்ணப்பம் செய்தார்.

எந்த பதிலும் வராததால் 2012-ம் ஆண்டு மார்ச் 23-ந் தேதி நினைவூட்டல் கடிதமும் கொடுத்தார். ஆனாலும் வங்கி மேலாளர் பரிசீலிக்கவில்லை. இதையடுத்து ஐகோர்ட்டில் முத்தழகி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, கல்விக்கடன் கேட்டு முத்தழகி கொடுத்த விண்ணப்பத்தை சட்டப்படி பரிசீலிக்கும்படி உத்தரவிட்டார்.

ஆனால், இந்த உத்தரவை எதிர்த்து வங்கி மேலாளர் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.வேல்முருகன் ஆகியோர் விசாரித்தனர். அப்போது, மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்த வங்கி நிர்வாகத்துக்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

சொத்து உத்தரவாதம் கூட இல்லாமல் கோடீஸ்வர தொழில் அதிபர்கள் தரும் உத்தரவாத கடிதத்தின் அடிப்படையில் அவர்களுக்கு வங்கிகள் கோடிக்கணக்கில் கடன் கொடுக்கிறது.

நாடு முழுவதும் பணக்காரர்கள், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் ஏழைகளுக்கு கடன் வழங்கும்போது வங்கி நிர்வாகம் பலவிதமான அளவுகோளை பின்பற்றுகின்றன. ஏழை மாணவர்கள் கல்வி கற்க அவர்களுக்கு கல்விக்கடன் வழங்க வேண்டும் என்ற மத்திய அரசு, ரிசர்வ் வங்கி உத்தரவுகளை வங்கி அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை.

இதனால் தங்களுக்கு தண்டனை கிடைக்குமே என்றுகூட அவர்கள் கவலைப்படுவதில்லை. இதற்கு சரியான உதாரணமாக இந்த வழக்கு திகழ்கிறது. மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த அதுவும் ஒரு ஏழை விவசாயியின் மகளை கல்விக்கடனுக்காக அலைக்கழித்துள்ளனர்.

இந்த மாணவிக்கு கடன் கொடுப்பது குறித்து பரிசீலிக்கும்படி தனி நீதிபதி 2012-ம் நவம்பர் 30-ந் தேதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தேவையில்லாமல் வங்கி நிர்வாகம் மேல்முறையீடு செய்துள்ளது. தனி நீதிபதியின் உத்தரவை அமல்படுத்தாமல் இழுத்தடிப்பதற்காக வங்கி நிர்வாகம் இப்படி செயல்பட்டுள்ளது.

ஏற்கனவே ஐகோர்ட்டில் இமயமலைபோல வழக்குகள் குவிந்துகிடக்கின்றன. கோர்ட்டின் பொன்னான நேரத்தை வீணடித்தது மட்டுமல்லாமல், தற்போது அந்த மாணவி 2015-ம் ஆண்டு என்ஜினீயரிங் படிப்பை முடித்துவிட்டதால் இந்த மேல்முறையீட்டு வழக்கே பயனற்று போய்விட்டது என்றும் கூறுகிறது.

வங்கி நிர்வாகம், கடனை கொடுக்காமல் இழுத்தடித்தது மட்டுமல்லாமல், ஏழை மாணவிக்கு நீதியும் கிடைக்காமல் செய்துவிட்டது. தற்போது அந்த மாணவியின் தரப்பில் வக்கீல்கள் யாரும் ஆஜராகவில்லை.

கடனை திருப்பித் தராதவர்கள் என்ற பட்டியலில் கல்விக்கடன் வாங்கியவர்கள் அதிகம் இல்லை என்று எங்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது. ஆனால் 50-க்கும் மேற்பட்ட பெரிய நிறுவனங்கள் வாங்கிய கடனை திருப்பித்தராமல் ஒவ்வொரு நிறுவனமும் குறைந்தது ரூ.250 கோடிக்கு மேல் கடன் பாக்கி வைத்துள்ளது. இதை கணக்கிட்டால் ரூ.48 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் பாக்கி இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஆனால், கல்விக்கடன் வழங்க வங்கி நிர்வாகங்கள் மறுக்கின்றன. விஞ்ஞானி, டாக்டர், என்ஜினீயர் என்று உயர்ந்தநிலைக்கு வரவேண்டும் என்று விரும்பும் மாணவர்களுக்கு கல்வி கற்கக்கூட நிதி கிடைப்பது இல்லை. இளைஞர்களுக்கு வழங்கப்படும் கல்வி தேசத்தின் அழியாத சொத்தாகும். அவர்களது கல்வி அறிவு தேசத்தின் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது. இதை வங்கிகள் புரிந்துகொள்ள வேண்டும்.

மேல்முறையீடு செய்யும் உரிமையை தவறாக பயன்படுத்தியும், மக்களின் வரிப்பணத்தையும், ஐகோர்ட்டின் நேரத்தை வீணடித்தும், இந்த மேல்முறையீட்டு மனுவை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நிர்வாகம் தாக்கல் செய்துள்ளது. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம்.

ஏழை மாணவிக்கு கல்விக்கடன் வழங்காமல் இழுத்தடித்ததற்காக வங்கி நிர்வாகத்துக்கு ரூ.25 ஆயிரம் வழக்கு செலவு (அபராதம்) விதிக்கிறோம். இந்த தொகையை 2 வாரத்துக்குள் மாணவி முத்தழகிக்கு வங்கி நிர்வாகம் வழங்கவேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.  #tamilnews
Tags:    

Similar News