செய்திகள்
கோப்புபடம்

பனியன் தொழிலாளர்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் - ஏற்றுமதியாளர் சங்க தலைவர் அறிவுறுத்தல்

Published On 2021-09-13 06:01 GMT   |   Update On 2021-09-13 06:01 GMT
கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில், கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகள் வலிமையான ஆயுதமாக உள்ளன.
திருப்பூர்:

ஊரடங்கு கட்டுப்பாடுகளால் திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களின் இயக்கம் நிறுத்தப்பட்டது. 8 லட்சம் பனியன் தொழிலாளர் வேலை இழந்தனர்.

உற்பத்தி முடக்கம், ஆர்டர் இழப்பு, தயாரித்த ஆடைகளை வர்த்தகருக்கு அனுப்ப முடியாமை, தயாரித்து அனுப்பிய ஆடைகளுக்கான தொகைகளை பெற முடியாமை என உள் நாட்டு, ஏற்றுமதி ஆடை உற்பத்தியாளர்கள், ஜாப்ஒர்க் துறையினரும் இன்னல்களை சந்தித்தனர்.

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில், கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகள் வலிமையான ஆயுதமாக உள்ளன. மூன்றாவது அலை உருவாகாமல் தடுத்து தடையில்லா தொழில் வளர்ச்சியை உறுதி செய்வதற்காக, இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.,) சார்பில் தொழிலாளருக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

தனியார் மருத்துவமனைகளிடம் விலை கொடுத்து வாங்கி நிறுவனங்கள், தங்கள் தொழிலாளருக்கு இலவசமாக ஊசி செலுத்தின. மொத்தம் 40 ஆயிரம் பேருக்கு ஊசி செலுத்தப்பட்டுள்ளது.

அதேபோல், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் (டீ சங்கம்) சார்பில் நடத்தப்பட்ட முகாம்கள் மூலம் 20 ஆயிரம் தொழிலாளருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசு தமிழகத்துக்கு கூடுதல் ‘டோஸ்’ தடுப்பூசி ஒதுக்கியுள்ளது. இதையடுத்து, இலவச தடுப்பூசி செலுத்தும் பணி வேகம் பெற்றுள்ளது.

3-வது அலை உருவாகாமல் தடுக்க அனைத்து தொழிலாளர்களும், தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் அறிவுறுத்தியுள்ளார். அவர் கூறியதாவது:

கொரோனா தொற்று பொருளாதார பின்னடைவுகளை ஏற்படுத்தியுள்ளது. தொற்று தடுப்பில் தடுப்பூசிகள் சிறப்பாக செயலாற்றுகின்றன. தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவியதால் திருப்பூர் ஆடை உற்பத்தி நிறுவனங்கள் தொகை செலுத்தி பெற்று பனியன் தொழிலாளருக்கு இலவசமாக ஊசி செலுத்தப்பட்டது.

தற்போது, தமிழக அரசிடம் அதிகளவில் தடுப்பூசி உள்ளது. மூன்றாவது அலை குறித்த அச்சம் உருவாகியுள்ளது. எனவே வாய்ப்பை பயன்படுத்தி பனியன் தொழிலாளர், பொதுமக்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். தங்களையும் குடும்பத்தினர், சுற்றத்தாரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும்.

இரண்டாவது அலையால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து திருப்பூர் பின்னலாடை துறை மீண்டு வருகிறது. மேலும் ஒரு அலை உருவானால் மீள்வது கடினம். பின்னலாடை துறையினர் தங்கள் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி தடுப்பூசி செலுத்திக்கொள்ள செய்ய வேண்டும் என்றார். 
Tags:    

Similar News