செய்திகள்
கோப்புபடம்

தி.மு.க. மற்றும் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து துடியலூரில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

Published On 2020-10-30 06:47 GMT   |   Update On 2020-10-30 06:47 GMT
துடியலூரில் தி.மு.க. மற்றும் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், வி.சி.ஆறுக்குட்டி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
துடியலூர்:

கடந்த சில தினங்களுக்கு முன்பு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை விமர்சித்து கோவையின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இதனை கண்டித்து தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோரின் பெயருக்கு களங்கள் விளைவிக்கும் வகையிலும், அவதூறு பரப்பும் நோக்கிலும் பேசியதாக கூறப்படுகிறது.

இதனை கண்டித்து கோவையில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் அ.தி.மு.க. சார்பில் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. துடியலூர் பஸ் நிலையம் அருகே அ.தி.மு.க. வடக்கு மாவட்டம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி. அருண்குமார், வி.சி.ஆறுக் குட்டி ஆகியோர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின், மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரை கண்டிக்கும் விதத்தில் கோஷ ங்கள் எழுப்பப்பட்டன.

பி.ஆர்.ஜி.அருண்குமார் பேசுகையில், அ.தி.மு.க. அரசையோ, தமிழக முதல்-அமைச்சரையோ, துணை முதல்- அமைச்சரையோ, அமைச்சர் எஸ்.பி.வேலுமணியையோ பேச தி.மு.க.விற்கு யோக்யதை இல்லை. அந்த அளவிற்கு ஊழல் செய்த கட்சி தி.மு.க. ஆகும். இந்தியாவிலேயே ஊழலுக்காக ஆட்சி கலைக்கப்பட்ட ஒரே கட்சி தி.மு.க. தான் என குற்றஞ்சாட்டினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் பலரும் கருப்பு சட்டை அணிந்து கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர் கோவனூர் துரைசாமி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.வி.என்.ஜெயராமன், மாவட்ட கவுன்சிலர் சரவணகுமார், ஊராட்சி தலைவர்கள் டி.ரவி, ப.ரங்கராஜ், கோவை மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் அமுல்கந்தசாமி மற்றும் அன்னூர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கணபதி 3 ம் நம்பர் பஸ் நிலையத்தில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்.எல்.ஏ, பகுதி செயலாளார்கள் வெண்தாமரை பாலு, நடராஜன் நடராஜன், கணபதி கமலாபிரஸ் ராஜு, கோவை மாநகர் மாவட்ட வர்த்தக அணி இணைச்செயலாளர் கணபதி ஆனந்தகுமார், பகுதி அம்மா பேரவை செயலாளர்கள் சபரிஸ்ரீனிவாசன், கணபதி விஸ்வநாதன், ரத்தினபுரி முருகன், வட்ட செயலாளர் விஸ்வநாதன் என்ற விசாகன்மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News