செய்திகள்

பொன்பரப்பி சம்பவத்தை கண்டித்து திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம்

Published On 2019-04-24 07:39 GMT   |   Update On 2019-04-24 07:39 GMT
பாராளுமன்ற தேர்தலில் பொன்பரப்பியில் நடந்த வன்முறை சம்பவத்தை கண்டித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று வள்ளுவர் கோட்டத்தில் நடந்தது.
சென்னை:

பாராளுமன்ற தேர்தலில் பொன்பரப்பியில் நடந்த வன்முறை சம்பவத்தை கண்டித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று வள்ளுவர் கோட்டத்தில் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒருங்கிணைத்தது. இதற்கு அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் தாமோதரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், ம.தி.மு.க. சார்பில் ஆவடி அந்திரிதாஸ், திராவிடர் கழக தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன், திரைப்பட இயக்குனர் கரு.பழனியப்பன், பேராயர் எஸ்றா சற்குணம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

அரசியல் ஆதாயத்துக்காக பா.ம.க. வன்முறையை உருவாக்குகிறது. சிதம்பரம் தொகுதியில் எப்போது தேர்தல் நடந்தாலும் அங்கு வன்முறையை ஏற்படுத்தி தலித்துகளை வாக்களிக்க விடாமல் அடித்து விரட்டப்படுகிறார்கள். தலித்துகளின் வாக்குரிமையை தடுக்கும் செயல்களில் பா.ம.க. பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

பொன்பரப்பியிலும் வெறியாட்டத்தை நடத்தி இருக்கிறார்கள். தலித்துகளின் வாக்குகளை தட்டி பறிக்கும் செயலை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இத்தகைய அராஜகத்தை பா.ம.க. மூடி மறைக்க முயற்சி செய்கிறது.

பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று கேட்டோம். ஆனால் தேர்தல் ஆணையம் மவுனமாக இருக்கிறது. அ.தி.மு.க. அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்பில்லை. பா.ம.க. போட்டியிடும் 7 தொகுதிகளில் தோல்வி அடைவார்கள். அதிக ஓட்டு வித்தியாசத்தில் சிதம்பரத்தில் திருமாவளவன் வெற்றி பெறுவார்.

பொன்பரப்பியில் மறு வாக்கு பதிவுக்கு உத்தரவிட்டு நடுநிலையை தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் கவிஞர் காசி முத்துமாணிக்கம், காங்கிரஸ் வேட்பாளர் ஜெயக்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் எஸ்.எஸ்.பாலாஜி, வன்னியரசு, உஞ்சையரசன், பாவரசு, பாலவன், செல்லத் துரை, ஆதவன், இரா. செல்வம் மற்றும் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர்.
Tags:    

Similar News