ஆன்மிகம்
பொற்றையடி சாய்பாபா கோவில்

பொற்றையடி சாய்பாபா கோவில் - நாகர்கோவில்

Published On 2019-08-27 01:48 GMT   |   Update On 2019-08-27 01:48 GMT
நாகர்கோவில் பொற்றையடியில் இருக்கும் ஸ்ரீசீரடி சாய்பாபா ஆனந்த ஆலயம் சாய்பாபா பக்தர்களுக்கு மட்டுமல்ல அனைத்து மத பக்தர்களையும் வா...வா.. வென அழைக்கும் வண்ணம் அமைந்துள்ளது.
கடல் அலை தாலாட்டும் கன்னியாகுமரியில் ஆன்மீக அன்பர்களின் மனம் கவர்ந்த கோவில்கள் ஏராளம் உள்ளன. இதில் நாகர்கோவிலில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பொற்றையடியில் இருக்கும் ஸ்ரீசீரடி சாய்பாபா ஆனந்த ஆலயம் சாய்பாபா பக்தர்களுக்கு மட்டுமல்ல அனைத்து மத பக்தர்களையும் வா...வா.. வென அழைக்கும் வண்ணம் அமைந்துள்ளது.

இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. இந்த ஆலயம் அமைந்திருக்கும் இடம் குமரி மாவட்டத்தில் சித்தர்கள் வாழ்ந்த மருந்துவாழ் மலையின் அடி வாரத்தில் இருப்பது. இன்னொன்று ஆலயத் தின் எதிரே ரம்மியமாக காட்சி யளிக்கும் ஏரி. கோவிலை சுற்றி வளர்ந்து நிற்கும் அரிய வகை மரங்கள், பூஞ்சோலைகள் மனதை சுண்டி இழுப்பதாக இருப்பது. இவையே இந்த கோவிலை நோக்கி நம்மை நகர வைக்கிறது.

கன்னியாகுமரிக்கு சுற்றுலா வருவோர் இக்கோவிலை கண்டதும் அவர்களாகவே இக்கோவிலுக்கு செல்வதன் மூலம் இதனை உண்மை என நாம் உணர்ந்து கொள்ளலாம்.

இத்தனை சிறப்புமிக்க இக்கோவில் இங்கு உருவாக காரணமானவர் யார்? என நாம் விசாரித்த போது நாகர்கோவிலை சேர்ந்த தொழில் அதிபர் நேப்பால் ராஜ் என்பவர் தான் இதனை உருவாக்கினார் என கோவில் ஊழியர்கள் தெரிவித்தனர். நேப்பால்ராஜ்ஜை சந்தித்து கோவில் உருவானவிதம் பற்றி கேட்டபோது அவர் கூறியதாவது:-

இக்கோவிலை கட்டும் முன்பு எனக்கு சீரடி சாய் பாபா பற்றி பெரிதாக எதுவும் தெரியாது. ஒரு முறை வியாபார விஷயமாக நான் மும்பை சென்றேன். அங்கிருந்து நான் அவுரங்காபாத் செல்ல வேண்டும். என்னுடன் ஆந்திராவை சேர்ந்த நண்பர் ஒருவரும் வந்தார். நாங்கள் அவுரங்காபாத் புறப்பட்ட போது நண்பர் என்னை சீரடி கோவிலுக்கு சென்று சாய்பாபாவை தரிசித்து விட்டு செல்லலாம் என கூறினார்.

அவரது விருப்பப் படிதான் நான் முதல்முறையாக சீரடி சென்றேன். அங்கு என் மனக்குறைகளை கூறி வேண்டிக்கொள்ளும்படி நண்பர் கூறினார். அவர் சொன்னபடி நானும் வேண்டிக்கொண்டேன். அதன்பின்பு தான் அந்த அற்புதம் நிகழ்ந்தது. நான் வேண்டிக்கொண்ட காரியங்கள் நினைத்தபடி நடந்தது. அது என்னை சீரடி சாய்பாபாவின் பக்தனாக மாற்றியது. தொடர்ந்து ஒவ்வொரு காரியத்தையும் அவரை நினைத்தே செய்ய தொடங்கினேன். அவை அனைத்தும் ஒவ்வொன்றாக நிறைவேறியது. என் மனைவியின் கனவிலும் சீரடி சாய்பாபா வந்து சென்றார். அவர் கொடுத்த தைரியத்தில் நாகர்கோவிலில் அவருக்கு ஒரு கோவில் கட்ட வேண்டும் என்ற எண்ணம் உருவானது.

இது பற்றியும் நான் சீரடி சென்று சாய்பாபாவின் தீவிர பக்தரான டாக்டர் சந்திரபானு சத்பதியிடம் தெரிவித்தேன். அவர் இப்போது கோவில் அமைந்துள்ள இடம் விரைவில் உன் கைக்கு வரும். அந்த இடத்தில் கோவில் கட்டு என்று கூறினார். அவரே அதற்கான திட்டங்களையும் வகுத்து கொடுத்தார். அதன்படி பணி களை தொடங்கினேன்.

எங்கள் குடும்பத்தின் சார்பில் ஒரு அறக் கட்டளையை உருவாக்கி அதன்மூலம் கோவில் கட்டும் பணியை தொடங்கினேன். இங்குள்ள சத்குரு டி.கே.எஸ். அய்யாவின் வழிகாட்டுதலின் பேரிலும், அவரது முன்னி லையிலும் கோவில் உருவாக் கப்பட்டது.

2009-ம் ஆண்டு பூமி பூஜை நடந்தது. அதன்பின்பு விறுவிறுவென கோவில் கட்டுமான பணிகள் நடைபெற்றன. கோவிலின் கீழ் தளத்தில் தியான மண்டபமும், கோவிலின் வலது புறம் வெற்றி வினாயகர் சன்னதியும், இடது புறம் ஸ்ரீதத்தாத்ரேயர் சன்னதியும் அமைக்கப்பட்டது.

இது தவிர சீரடியில் இருப்பது போல சாய்பாபா பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் துவாரகமாயி மடமும் அமைக்கப்பட்டது. இங்கு 24 மணி நேரமும் எரியும் உதிபிரசாத மாடமும் உருவாக்கப்பட்டது. இந்த மாடத்தில் ஆல், வேம்பு, அரசு, பலா, மா, அத்தி, அருகம்புல் ஆகிய 7 வகை மரக்கட்டைகளை பயன்படுத்தி உதிபிரசாதம் தயாரிக்கப்படுகிறது. இது தான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக அளிக்கப்படுகிறது.

கோவிலின் கீழ் தளத்தில் இருந்து மேல் தளத்திற்கு சென்றால் அங்கு சீரடி சாய்பாபாவின் சன்னதி அமைந்துள்ளது. அங்கு பாபா அருட்பார்வையுடன் பக்தர்களுக்கு ஆசி வழங்கும் சிலை உள்ளது. இது ஜெய்ப்பூரில் இருந்து கொண்டு வரப்பட்டதாகும். சாய்பாபாவின் சிலை ஜெய்ப்பூரில் உருவாக்கப் பட்டதும், அதனை சீரடி கொண்டு சென்று அங்கேயே 9 மாதங்கள் வைத்திருந்தோம்.அதன்பின்பே இச்சிலை பொற் றையடி கொண்டு வரப் பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.

கோவிலின் கும்பாபிஷேகம் கடந்த 2012-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4-ந் தேதி நடைபெற்றது. அன்றிலிருந்து கோவி லுக்கு வரும் பக்தர்கள் எண் ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இக்கோவில் கிழக்கு பார்த்து அமைந்துள்ளது. கோவிலுக்கு வரும் பக் தர்கள் சாய்பாபாவின் ஈர்ப்பையும், அவரது அருளாசியையும் பெற்று செல்கிறார்கள். இவ் வாறு அவர் கூறினார்.

இக்கோவிலில் ஆண்டு தோறும் வருஷாபிஷேகம் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெறும். அன்று சாய்பாபாவுக்கு 3006 லிட்டர் பால் அபிஷேகம் செய்யப்படும். இது போல சாய்பாபாவுக்கு மிகவும் பிடித்த ராமநவமி தினமும், குரு பூர்ணிமா நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெறும். இதுபோல விஜயதசமி விழாவும் கோலாகலமாக கொண்டாடப்படும். இவ் விழாக்களில் ஏராளமானோர் கலந்து கொண்டு பாபா வின் அருளையும், ஆசி யையும் பெற்று செல்கிறார்கள்.

சூரிய காந்தக்கல்

அக்டோபர் 15-ந் தேதி சாய்பாபா ஜீவசமாதி அடைந்த நாளில் பொற் றையடி ஆலயத்தில் சூரியனின் ஒளிபடும் விதத்தில் சூரியகாந்த கல் அமைக்கப்பட்டு உள்ளது. பாபா சன்னதியில் அமைந்துள்ள இக்கல்லின் மீது ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 15-ந் தேதி சூரியனின் ஒளிக் கதிர்கள் பட்டு அந்த கல் ஒளிருவதை பார்த்தால் பாபாவே நேரில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பது போல இருக்கும். ஒளி விழும்போது கோவிலுக்குள் இந்திரலோக பிரகாசமும், திவ்ய அதிர்வுகளும் ஏற்படுவதை பக்தர்கள் உணர்ந்து உள்ளனர். இதனை காண கண்கோடி வேண்டும். பாபாவின் உடனிருப்பை உணர கொடுத்து வைத்திருக்க வேண்டும். இதற்காகவே பலரும் அக்டோபர் 15-ந் தேதி கோவிலுக்கு வர காத்திருப்பார்கள்.

வழிபாடுகள்

பொற்றையடி சாய்பாபா ஆனந்த ஆலயத்தில் தினமும் காலை 6.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 6.45 மணிக்கு காலை ஆரத்தியும், 7.15 மணிக்கு மங்கல அபிஷேகமும், 7.45-க்கு 108 நாமவாரியும் நடக்கிறது.

பகல் 12 மணிக்கு மதியான ஆரத்தியுடன் நடை சாத்தப்படுகிறது. மாலை 4.30 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து 6.30 மணிக்கு மாலை ஆரத்தி, 8 மணிக்கு இரவு ஆரத்தி, 8.30 மணிக்கு நடை சாத்தப்படுகிறது.

கூட்டு பிரார்த்தனை

ஒவ்வொரு வியாழக்கிழமையும் பகல் 11.45. மாலை 6.15, இரவு 7.45 மணிக்கு கூட்டு பிரார்த்தனை நடைபெறுகிறது. சிறப்பு மிக்க இக்கோவிலுக்கு நாமும் ஒரு முறை சென்று வருவோம். சாய்பாபாவின் அருளாசியை பெற்று வரு வோம்.... கோவில் தொடர்பான மேலும் விவரங்களுக்கு செல்போன் எண்: 90030 24270.

குழந்தை வரம் அருளும் பாபா

சாய்பாபாவை பின் பற்றும் பக்தர்களுக்கு அவர் தொடர்ந்து ஆசி வழங்கி வருகிறார். இதுபோல பொற்றையடி சாய்பாபா ஆலயத்திற்கு வரும் பக்தர்களில் பலருக்கும் அவர் பல அற்புதங்களை செய்து வருகிறார். குறிப்பாக குழந்தை வரம் வேண்டி வரும் பக்தர்களுக்கு மழலை பாக்கியம் கிடைப்பதாக இங்கு வந்து சென்ற பக்தர்கள் பலரும் உள்ளம் உருக தெரிவித்தனர்.

ஆயிரம் செல்வங்கள் இருந்தும் மழலை செல்வம் இல்லையே என்று ஏங்கும் பக்தர்களின் வேண்டு தல்களை பொற்றையடி ஆனந்த ஆலயத்தில் குடி கொண்டிருக்கும் சாய்பாபா தீர்த்து வைக்கிறார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
Tags:    

Similar News