செய்திகள்
கோப்பு படம்.

எல்லையில் பிடிபட்ட வீரரை உடனே திருப்பி அனுப்புங்கள்- சீனா வேண்டுகோள்

Published On 2021-01-10 09:33 GMT   |   Update On 2021-01-10 09:33 GMT
இருட்டில் வழிதவறி இந்திய பகுதிக்குள் வந்த எங்கள் வீரரை உடனே திருப்பி அனுப்ப வேண்டும் என்று சீனா வேண்டுகோள் விடுத்துள்ளது.

புதுடெல்லி:

லடாக் எல்லையில் சீன ராணுவம் கடந்த ஆண்டு மே மாதம் அத்துமீறலில் ஈடுபட்டது. அப்போது இரு தரப்பு ராணுவத்திற்கும் இடையே மோதல் உருவானது. இதற்கு பிறகு அந்த பகுதியில் நிலவும் பதட்டம் காரணமாக இரு நாட்டு ராணுவமும் குவிக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் ஹாங்காங் ஏரி அருகே சீன ராணுவ வீரர் ஒருவர் எல்லையை தாண்டி இந்திய பகுதிக்குள் வந்தார். அதை இந்திய கண்காணிப்பு படையினர் கண்டுபிடித்தனர். அவர் உடனடியாக கைது செய்யப்பட்டார்.

அவர் வழி தவறி வந்துவிட்டாரா? அல்லது உளவு பார்க்கும் வகையில் வேண்டுமென்றே வந்தாரா என்று தெரியவில்லை. அவரிடம் ராணுவ உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே சீன அரசு தரப்பில் இருந்து ஒருதகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‘‘எங்களது வீரர் இருட்டின் காரணமாகவும், பூகோள அமைப்பு பிரச்சினையினாலும் வழி தவறி இந்திய பகுதிக்குள் வந்து விட்டார். ஏற்கனவே உள்ள ஒப்பந்தங்களின் அடிப்படையில் அவரை உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும்.

தேவையற்ற கால தாமதம் சர்ச்சையை ஏற்படுத்திவிடும். ஏற்கனவே அந்த வீரர் காணாமல் போனதால், தேடி கொண்டிருந்தோம். அது பற்றியும் இந்தியாவுக்கும் தகவல் தெரிவித்தோம்.

நாங்கள் தகவல் தெரிவித்ததற்கு பிறகுதான் எங்கள் வீரரை இந்தியா பிடித்து வைத்திருப்பதாக கூறப்பட்டது. இதில் எந்த காலதாமதமும் இன்றி அவரை விடுவிக்க வேண்டும்’’ என்று கூறி உள்ளனர்.

இதற்கு இந்திய ராணுவ தரப்பில் பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், ‘‘உயர் அதிகாரிகள், வீரர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். அதன் பிறகு விடுவிப்பதா இல்லையா என்பது தொடர்பாக உரிய முடிவு எடுக்கப்படும்’’ என்று கூறியுள்ளனர்.

ஏற்கனவே கடந்த அக்டோபர் மாதம் இதேபோல ஒரு ராணுவ வீரர் இந்திய எல்லைக்குள் நுழைந்தார். அவரை இந்திய ராணுவத்தினர் கைது செய்து பின்னர் திருப்பி அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News