செய்திகள்
இடமாற்றம்

குன்னத்தூர் அருகே வழி தவறி வந்த பசுமாட்டை விற்ற போலீஸ் ஏட்டு இடமாற்றம்

Published On 2020-11-19 07:32 GMT   |   Update On 2020-11-19 07:32 GMT
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே வழி தவறி வந்த பசுமாட்டை விற்ற போலீஸ் ஏட்டுவை இடமாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார்.

குன்னத்தூர்:

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே உள்ள வட்டாலபதியில் பசுமாடு ஒன்று பாதை மாறி சுற்றித்திரிந்தது.

இதனை அந்த பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் பார்த்து பசுமாட்டை பிடித்து தனது தோட்டத்தில் கட்டி வைத்து அதற்கு தேவையான குடிநீர் மற்றும் தீவனத்தை வைத்தார். உரியவர் தேடி வந்தால் அவரிடம் ஒப்படைத்து விடுவேன் என்று கூறி வந்தார்.

இது குறித்து குன்னத்தூர் போலீசில் ஏட்டாக இருந்த ரங்கநாதன் என்பவருக்கு இது குறித்து தகவல் கிடைத்தது. இதனையடுத்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் பசுமாட்டுக்கு அடைக்கலம் கொடுத்திருந்த விவசாயியை சந்தித்தார். பசுமாடு விற்பனை

வழிதவறி வந்த பசுமாடு என்ன விலைக்கு போகும் என்று ஏட்டு கேட்டார். அதற்கு விவசாயி ஒரு குறிப்பிட்ட விலையை கூறினார். அந்த பணத்தை நீயே எனக்கு கொடுத்து விட்டு பசுமாட்டை வைத்துக்கொள் என்று ஏட்டு ரங்காதன் கூறினார். இதனையடுத்து விவசாயி உரிய பணத்தை ஏட்டு ரங்கநாதனிடம் கொடுத்தார்.

இந்நிலையில் பணத்தை கொடுத்து விவசாயி பசுமாட்டின் உரிமையாளர் வந்து விட்டால் தனக்கு பிரச்சினை வரும் என்று எண்ணி இது குறித்து உயர் போலீஸ் அதிகாரிக்கு தகவல் தெரிவித்தார். உயர் போலீஸ் அதிகாரி இது குறித்து விசாரணை நடத்தினார்.

பசுமாட்டை ஏட்டு விற்பனை செய்தது உறுதி செய்யப்பட்டது. இது குறித்து திருப்பூர் போலீஸ் சூப்பிரண்டு திஷா மிட்டலுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் பசுமாட்டை விற்ற போலீஸ் ஏட்டுவை குன்னத்தூர் போலீஸ் நிலையத்தில் இருந்து சேவூர் போலீஸ் நிலையத்துக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.

பசுவின் உரிமையாளர் குறித்து விசாரணை நடத்தி பசுவை அவரிடம் ஒப்படைக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News