செய்திகள்
மு.க. ஸ்டாலின், ரஜினி

நேரில் சென்று ரஜினியிடம் நலம் விசாரித்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

Published On 2021-10-31 05:37 GMT   |   Update On 2021-10-31 09:09 GMT
கடந்த திங்கட்கிழமை தாதா சாகேப் பால்கே விருதை பெற்றுக்கொண்ட ரஜினி, கடந்த 28-ந்தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நடிகர் ரஜினிகாந்துக்கு கடந்த 28-ந் தேதி மாலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து ஆழ்வார் பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். டெல்லி சென்று தாதா சாகேப் பால்கே விருதை பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியுடன் சென்னை திரும்பிய ரஜினிகாந்த், ரசிகர்களோடு அமர்ந்து ‘அண்ணாத்த’ படத்தின் பிரிவியூ ஷோவையும் பார்த்தார்.

இந்தநிலையில் அவரது உடலில் மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தில் திடீர் தடை ஏற்பட்டது. இதன் காரணமாக அவருக்கு தலைவலி, காய்ச்சல் அறிகுறிகள் ஏற்பட்டன. இதனைத்தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் ரஜினியை அனுமதித்து டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.

ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து நேற்று முன்தினம் மாலை காவேரி மருத்துவமனை சார்பில் மருத்துவ அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் மூளைக்கு செல்லும் ரத்தக்குழாயில் ஏற்பட்ட சிறிய அடைப்பை சரி செய்ய சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் அதன் பிறகு அவரது உடல் நிலை தேறி வருவதாகவும் ரஜினி நலமுடன் உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து அடுத்த சில நாட்களில் ரஜினிகாந்த் வீடு திரும்ப வாய்ப்பு இருப்பதாகவும் ஆஸ்பத்திரி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10.30 மணியளவில் நடிகர் ரஜினிகாந்தை சந்திப்பதற்காக காவேரி மருத்துவமனைக்கு சென்றார். அங்கு ரஜினிகாந்த் சிகிச்சை பெற்று வரும் அறைக்கு சென்று நேரில் அவரிடம் உடல் நலம் குறித்து விசாரித்தார். ரஜினிக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்களிடமும் சிகிச்சை தொடர்பான விவரங்களை அவர் கேட்டு அறிந்தார்.

கடந்த 3 நாட்களாக ரஜினிகாந்தை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து தொடர்ந்து சிகிச்சை அளித்தனர். இன்று 4-வது நாளாக அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இதையடுத்து ரஜினிகாந்த் இயல்புநிலைக்கு திரும்பி உள்ளார். 
இதனைத்தொடர்ந்து அவரை டிஸ் சார்ஜ் செய்வது தொடர்பாக டாக்டர்கள் குழுவினர் ஆலோசித்து வருகிறார்கள். இன்று இதுதொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது.

உடல்நிலை தேறியதை அடுத்து நாளை அல்லது நாளை மறுநாள் ரஜினிகாந்த் ‘டிஸ்சார்ஜ்’ ஆக வாய்ப்பு இருப்பதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன. சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பிறகு மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும் என்று ரஜினிகாந்துக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளது. வீடு திரும்பிய பிறகு சில நாட்களுக்கு முழுமையான ஓய்வில் இருக்க வேண்டும் எனவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

ரஜினிகாந்தின் மூளைக்கு செல்லும் ரத்தக்குழாயில் ஏற்பட்ட பாதிப்பை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சரி செய்துவிட்டதாகவும், இதனால் பெரிய அளவில் அதுதொடர்பான பிரச்சினைகள் இனி ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை என்றும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

ரஜினிகாந்துக்கு ஏற்கனவே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதனை கருத்தில் கொண்டும், முதுமை மற்றும் கொரோனா பரவல் காரணமாகவும் ரஜினிகாந்த் இனிவரும் நாட்களில் மிகுந்த கவனமுடன் செயல்பட வேண்டும் எனவும் டாக்டர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். ரஜினிகாந்தின் குடும்பத்தினரும் அதனை ஏற்றுக்கொண்டு அவரது உடல்நிலையில் கூடுதல் அக்கறையுடன் செயல்பட முடிவு செய்துள்ளனர்.
Tags:    

Similar News