ஆன்மிகம்
திருவள்ளூர் வீரராகவர் கோவில்

மகாளய அமாவாசை: திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் நாளை பக்தர்கள் தரிசனம் ரத்து

Published On 2021-10-05 07:47 GMT   |   Update On 2021-10-05 07:47 GMT
திருவள்ளூர் வீரராகவர் கோவிலுக்கு பக்தர்கள் நாளை தர்ப்பணம் கொடுக்க வரவேண்டாம் என்றும் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் கோவில் நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அமாவாசை நாட்களில் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். தை, ஆடி, புரட்டாசி மாதம் மகாளய அமாவாசை நாட்களில் வழக்கத்தை விட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குவிவார்கள்.

தற்போது கொரோனா தொற்று காரணமாக கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், தொற்று பரவாமல் இருக்கவும் வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபாட்டு தளங்களில் பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாளை (புதன் கிழமை) மகாளய அமாவாசை தினம் வருகிறது. இதையொட்டி பக்தர்கள் ஏராளமானோர் வருவார்கள் என்பதால் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை முதல் நாளை (புதன்கிழமை) முழுவதும் பக்தர்கள் சாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கோவிலில் வழக்கமான பூஜைகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு பலகை கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் முன்பு வைக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் நாளை தர்ப்பணம் கொடுக்க வரவேண்டாம் என்றும் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் கோவில் நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நாளை சாமி தரிசனம் கிடையாது என்பதால் இன்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் வீர ராகவர் கோவிலில் குவிந்தனர். அவர்களை ஒழுங்குபடுத்தி கோவில் ஊழியர்கள் சாமி தரிசனத்திற்கு அனுப்பினர்.

வழக்கமாக அமாவாசையை முன்னிட்டு முன்னதாகவே நள்ளிரவில் பக்தர்கள் வந்து கோவிலை சுற்றி தங்குவது வழக்கம். இதையடுத்து பக்தர்கள் தங்குவதை தடுக்கும் வகையில் திருவள்ளூர் நகரம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
Tags:    

Similar News