செய்திகள்
நாடாளுமன்றம்

சம்பள குறைப்பு மசோதாவால் சேமிக்கப்படும் தொகை ரூ.53.83 கோடி- திமுக எம்.பி.க்கு மத்திய மந்திரி பதில்

Published On 2020-09-18 12:14 GMT   |   Update On 2020-09-18 12:14 GMT
சம்பள குறைப்பு மசோதாவால் சேமிக்கப்படும் தொகையானது ரூ.53.83 கோடி என திமுக எம்.பி.க்கு நாடாளுமன்ற விவகார மந்திரி பிரகலாத் ஜோஷி பதில் கூறியுள்ளார்.
புதுடெல்லி:

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மேலவையில், எம்.பி. அசோக் கஸ்தி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மேலவை தலைவர் வெங்கய்யா நாயுடு பேசினார்.  இதன்பின்பு, பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பூஜ்யநேர நோட்டீஸ் வழங்கினர்.

இந்த நிலையில், மேலவையில் ஹோமியோபதி மத்திய கவுன்சில் (திருத்த) மசோதா 2020, இந்திய மருத்துவ மத்திய கவுன்சில் (திருத்த) மசோதா 2020 மற்றும் மந்திரிகளுக்கான சம்பளம் மற்றும் படிகள் (திருத்த) மசோதா 2020 உள்ளிட்ட மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு வழியே நிறைவேற்றப்பட்டன.

இவற்றில், மந்திரிகளுக்கான சம்பளம் மற்றும் படிகள் குறைப்பு (திருத்த) மசோதா 2020 பற்றி மேலவையில், தி.மு.க. எம்.பி. வில்சன் பேசும்பொழுது, இந்த மசோதாவால் குறைக்கப்படும் தொகை சுமார் ரூ.4 கோடி.  ஆனால், மசோதாவை விவாதிப்பதால் ஆகும் செலவு ரூ.6 கோடி என பேசினார்.

நாடாளுமன்ற அவையை ஆளும் கட்சி எப்படி வீணடிக்கிறது என்பதற்கு சம்பள குறைப்பு மசோதா உதாரணம்.  நாங்கள் மசோதாவை எதிர்க்கவில்லை.  நாங்களாகவே நிதி தர தயாராக இருக்கிறோம் என்று கூறினார்.

இதற்கு பதிலளித்து பேசிய நாடாளுமன்ற விவகார மந்திரி பிரகலாத் ஜோஷி, தொண்டு செய்வது என்பது வீட்டில் இருந்து தொடங்க கூடியது.  நம்முடைய நாட்டிற்கு நாம்தான் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும்.

சம்பள குறைப்பு மசோதாவால் சேமிக்கப்படும் தொகையானது ரூ.6 கோடி இல்லை.  அது ரூ.53.83 கோடி ஆகும் என கூறினார்.

இதேபோன்று உள்விவகார துறை இணை மந்திரி கிஷன் ரெட்டி பேசும்பொழுது, இந்த மசோதா நிறைவேற்றப்படுவதற்கான நோக்கம் என்பது பணசேமிப்புக்காக மட்டுமேயல்ல.  அது ஒரு கொள்கை விவகாரமும் கூட என்று பேசினார்.
Tags:    

Similar News