ஆன்மிகம்
நெல்லை புஷ்கர நிறைவு விழாவில் தாமிரபரணி ஆற்றுக்கு தீபஆரத்தி காண்பிக்கப்பட்டபோது எடுத்த படம்.

நெல்லை தாமிரபரணி ஆற்றுக்கு சிறப்பு ஆரத்தி

Published On 2019-11-04 03:52 GMT   |   Update On 2019-11-04 03:52 GMT
புஷ்கர நிறைவு விழாவில் 3-ம் நாள் நிகழ்ச்சியில் நெல்லையில் கொட்டும் மழையில் தாமிரபரணி ஆற்றுக்கு சிறப்பு ஆரத்தி வழிபாடு நடந்தது.
தாமிரபரணி புஷ்கர விழா 144 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்தது. விழா நடந்து ஓர் ஆண்டு நிறைவு பெறுவதையொட்டி புஷ்கர நிறைவு விழா கடந்த 1-ந் தேதி தொடங்கியது. இந்த விழா நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி ஆற்று பகுதியில் உள்ள 64 தீர்த்தக்கட்டங்களில் நடந்து வருகிறது.

நெல்லை சந்திப்பு கைலாசபுரம் தைப்பூச மண்டபம் படித்துறையில் நேற்று 3-வது நாளாக நிகழ்ச்சி நடந்தது. மண்டபம் அருகே மேடை அமைக்கப்பட்டு இருந்தது. அங்கு நூல் வெளியீட்டு விழா, தாமிரபரணி பற்றிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர்கள் மற்றும் படைப்பாளிகளுக்கு நினைவு பரிசு வழங்கும் விழா நடந்தது.

விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜூ, காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரசுவதி சுவாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். விழா மேடையில் விஜயேந்திர சரசுவதி சுவாமி போல் மெழுகு பொம்மை வைக்கப்பட்டு இருந்தது.

தொடர்ந்து தாமிரபரணி ஆற்றுக்கு சிறப்பு ஆரத்தி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது மழை பெய்தது. கொட்டும் மழையிலும் மலர் தூவி, தாமிரபரணி ஆற்றுக்கு சிறப்பு ஆரத்தி எடுக்கப்பட்டது.

விழாவில், செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ., நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா, வேளாக்குறிச்சி செங்கோல் ஆதீனம், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையாளர் பரஞ்ஜோதி, முன்னாள் போலீஸ் ஐ.ஜி. மாசானமுத்து, பல்வேறு மடங்களை சேர்ந்த ஆதீனங்கள், ஆன்மிகவாதிகள், மடாதிபதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News