சிறப்புக் கட்டுரைகள்
டாக்டர் ஸ்ரீனிவாசன் ஜி ராவ்

கோடைவெயில் தாக்கத்தில் இருந்து கண்களை பாதுகாக்கும் வழிமுறைகள்

Published On 2022-04-16 10:48 GMT   |   Update On 2022-04-16 10:48 GMT
கண்ணில் அரிப்பு இருக்கும்போதும் கூட அவற்றை அழுத்தித் தேய்ப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்; ஏனெனில், இது தொற்றுப் பாதிப்பை இன்னும் தீவிரமாக்கிவிடும்.


இந்த ஆண்டு கோடைகாலம் வழக்கத்தை விட மிகக் கடுமையானதாக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.

கோடைக்காலத்தில் கண்ணீர் படலங்கள் அதிவேகமாக ஆவியாகி விடுவதால் நமது கண்கள் மிக எளிதாகவே உலர்ந்து விடுகின்றன. இது நிகழும்போது கண்ணில் எரிச்சலுணர்வு ஏற்படுகிறது. போதுமான கண்ணீர் இல்லாததால் அல்லது கண்ணீரின் தரம் குறைந்திருப்பதால் நமது கண்களால் அவைகளுக்கு ஈரப்பதத்தை வழங்க முடிவதில்லை என்பதே இதற்குக் காரணம்.

அதிகரிக்கும் வெப்பநிலையானது, மாசு மற்றும் ஈரபதத்தோடு சேரும்போது பலருக்கு கண்அழற்சிகள் ஏற்படுகின்றன. கண்களில் அரிப்பு, கண்கள் சிவத்தல், வீக்கம் மற்றும் எரிச்சல் ஆகியவற்றிற்கு இது வழிவகுக்கிறது.

விழிக்கோளத்தின் மேற்புறத்தை மூடியிருக்கின்ற திசுவான கண் வெளிப்படலத்தின் அழற்சியான விழிவெண்படல அழற்சி, கோடையில் உருவாகக்கூடிய மற்றொரு பொதுவான பிரச்சினையாகும்.

கண் சிவத்தல் (‘மெட்ராஸ் ஐ’) மற்றும் கண் இமைகளில் வீக்கம், அத்துடன் கண்களில் வலி ஆகியவை காணப்படுகின்ற ஒரு நுண்ணுயிரி தொற்றியான கண்ணிமைக்கட்டி போன்ற பாதிப்புகளும் கோடைகாலத்தில் அதிகரிப்பது வழக்கமானதே.

கண்நோய்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள ஐந்து இன்றியமையா வழிகாட்டல்கள் கீழே தரப்பட்டுள்ளன:

கோடைக்காலத்தில் ஏர்கண்டி ‌ஷனர்களிடம் நாம் சரணாகதி அடைவது வழக்கமானதே. இன்றைய காலகட்டத்தில் கணினி மானிட்டர்களை நீண்டநேரம் உற்று நோக்கியவாறு பணியாற்றுவதும் அவசியமாகிவிட்டது. கண் நலத்தைப் பாதிக்கக்கூடிய ஒரு ஆபத்தான கலவையாக இந்த இரண்டும் இருக்கக்கூடும்.

ஏசி இயக்கப்படும்போது அறையின் வெப்பநிலை குறைகிறது. அதைப்போலவே ஈரப்பதமும் குறையும். இதனால் கண்ணீர் ஆவியாகும் செயல்பாட்டை மந்தமாக்குவதற்கு முக்கியமானதாக இருக்கும் மெய்பம் என அறியப்படும் எண்ணையை சுரக்கின்ற சுரப்பிகளின் (மெய் போமியச் சுரப்பி) திறனையும் இது குறைத்து விடுகிறது. ஆகவே, குளிர்சாதன சூழலில் நமது கண்கள் மிக விரைவாகவே உலர்ந்து விடுகின்றன.

கணினி, டிவி திரையை நீண்டநேரம் தொடர்ந்து பார்ப்பது இப்பிரச்சினையை இன்னும் மோசமாக்கி விடுகிறது. நமது கண்கள் இமைக்கின்ற இயங்குமுறையில் இது குறுக்கீடு செய்கிறது.

வழக்கமாக ஒரு நிமிடத்திற்கு சுமார் 15-20 தடவைகள் நாம் கண்களை இமைக்கின்றோம். ஒவ்வொரு முறையும் இமைக்கும்போது கண்கள் மீது கண்ணீர் சீராகப் பரவ நாம் உதவுகிறோம். இதுவே உலர்ந்துவிடாமல் கண்களை பாதுகாத்து வைக்கிறது.

ஆனால், கணினியில் பணியாற்றும்போது சராசரியாக சுமார் 7-10 தடவைகள் மட்டுமே கண்களை நாம் இமைக்கிறோம். இதன் விளைவாக நமது கண்கள் உலர்வதால், டிஜிட்டல் அழுத்தம் என அறியப்படுகின்ற ஒரு பாதிப்பான கண் எரிச்சல் நமக்கு உருவாகிறது.

இதன் காரணமாக, குளிர்சாதன வசதி உள்ள சூழலில் கணினிகளில் பணியாற்றுவது என்பது, உலர்ந்த கண்கள் என்ற பிரச்சினையை வரவழைப்பதற்கான ரெசிபியாகவே இருக்கிறது.

கோவிட் பெருந்தொற்றுப் பரவலுக்குப் பிறகு பணியாற்றுகின்ற நபர்கள் மத்தியில் கணினி திரையைப் பார்க்கின்ற நேரம் ஒரு நாளுக்கு சுமார் 3 மணி நேரங்களில் இருந்து, 8 மணி நேரங்கள் வரை அதிகரித்திருப்பதை ஆய்வுகள் காட்டுகின்றன. குழந்தைகளும் இதற்கு விதிவிலக்கல்ல. பெரியவர்களுக்கு நிகராக, சில குழந்தைகள் அவர்களைவிட அதிக மணி நேரங்கள், திரைகளுக்கு முன் அமர்ந்துகொண்டு தங்கள் நேரத்தை செலவிடுகின்றனர். இதன் பின்விளைவாக பத்தாண்டுகளுக்கு முன்பு 15 சதவீதத்துக்கும் குறைவாக இருந்த உலர்ந்த கண்கள் பாதிப்பு விகிதமானது சமீப ஆண்டுகளில் 30-40 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது.

இத்தகைய பாதிப்புகளை அனைவராலும் முற்றிலுமாக தவிர்க்க இயலாது என்பது புரிந்துகொள்ளக்கூடியதே. ஆனால், இந்த ஆபத்தை நீக்குவதற்கு அல்லது குறைப்பதற்கு சுமார் 28 டிகிரி செல்சியஸ் என்ற மிதமான அளவில் ஏசியை நாம் இயக்கலாம்.

டிஜிட்டல் கண் அழுத்தம் என்ற இடரைத் தணிப்பதற்கு 20-20-20 விதியைப் பின்பற்றுவது முக்கியம். திரையைப் பார்க்கும் ஒவ்வொரு 20 நிமிடங்கள் காலஅளவிற்கும் பிறகு ஒரு 20 நொடி இடைவெளி விடவேண்டும் மற்றும் நாம் இருக்கும் இடத்தில் இருந்து 20 அடி தூரத்திலுள்ள பொருளை அல்லது இடத்தைப் பார்க்க வேண்டும் என்பதே இந்த விதியின் பரிந்துரை.

பிரதிபலிப்பிற்கு எதிர்ப்புத்திறன் பூச்சு கொண்ட கண் கண்ணாடிகளை நீங்கள் பயன்படுத்தலாம். உங்கள் கண்கள் வழியாக அதிக வெளிச்சம் கடந்து செல்வதை கண்ணாடிகள் அனுமதிக்கும். இதன் காரணமாக, கண்களை அவைகள் ரிலாக்ஸ் செய்யும்.

நீங்கள் உண்ணும் உணவைச் சார்ந்தே உங்கள் கண்களும் இருக்கும். நாம் உண்ணும் உணவில் அதிகளவிலான திரவங்கள் கண்டிப்பாக இருக்கவேண்டும்; அப்போதுதான் உடலால் இழக்கப்படும் திரவச் சத்துக்களை விரைவாக அவைகள் ஈடுசெய்ய முடியும். ஒவ்வொரு நாளும் ஐந்து லிட்டர் நீர் அருந்துவது நல்லது. இளநீர், எலுமிச்சை ஆரஞ்சு சாறு, கீரை, புதினா, கேரட், ஆப்பிள் மற்றும் தக்காளி ஆகியவற்றின் சாறுகளை அருந்துவதும் இதில் உள்ளடங்கும்.

பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் மென் குளிர்பானங்களைத் தவிர்ப்பதே நல்லது. பழங்கள் மற்றும் காய்கறிகளைப் பொறுத்தவரை வழக்கமாகப் பரிந்துரைக்கப் படுபவற்றில் மாம்பழம், புரோக்கோலி மற்றும் முட்டைக்கோஸ் ஆகியவை உள்ளடங்கும்.

அழற்சியை விளைவிக்கின்ற முடிவுறா மூலக்கூறுகளை அழிக்கக்கூடிய மற்றும் திரவங்களை அதிகரிக்கக்கூடிய வைட்டமின்கள் மற்றும் உயிர் வளியேற்ற எதிர்ப்பிகள் சுரப்பதற்கு இந்த உணவுகள் உதவுகின்றன. எண்ணெய் அதிகமாக உள்ள உணவுகள் உட்கொள்வதை தவிர்ப்பது அல்லது குறைத்துக்கொள்வது முக்கியம்.

தனிப்பட்ட உடல் தூய்மை மிக மிக முக்கியமானது. வாய்ப்பிருக்கும் போதெல்லாம் வழக்கமான சூழல் வெப்பநிலையில் உள்ள குழாய் நீரைக் கொண்டு நமது முகங்களை கழுவவேண்டும்; கண்களை நன்கு அலசவேண்டும். வெளியில் இருந்து அலுவலகத்திற்கு அல்லது வீட்டிற்கு நாம் வரும்போது, இதை நாம் கண்டிப்பாக செய்ய வேண்டும்.

“சிவந்த கண்” (மெட்ராஸ் ஐ) உட்பட, பல கண் தொற்றுகள் ஒருவருக்கொருவர் தொடர்பின் மூலமாகவே பரவுகின்றன. எனவே, பிறரால் பயன்படுத்தப்பட்டிருக்கக்கூடிய டவல்கள், கைக்குட்டைகள் மற்றும் பிற தனிப்பட்ட பொருட்களைப் பயன்படுத்துவதை தவிர்ப்பதும் முக்கியமானது.

கண்ணில் அரிப்பு இருக்கும்போதும் கூட அவற்றை அழுத்தித் தேய்ப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்; ஏனெனில், இது தொற்றுப் பாதிப்பை இன்னும் தீவிரமாக்கிவிடும்.

சூரிய ஒளியை நேரடியாகப் பார்ப்பதை தவிர்த்துவிடுங்கள். கண்ணின் பின்பகுதியில் உள்ள விழித்திரையின் ஒரு அங்கமான விழித்திரைப்பொட்டு (மக்குலா) ஐ இது பாதிக்கும்.

வெயிலில் நீங்கள் வெளியே செல்லும் போது ஒரு தொப்பியையும், கண் கண்ணாடிகளையும் நீ அணியலாம். புற ஊதாக்கதிர்கள் மற்றும் இரண்டாம் புற ஊதாக் கதிர்களில் இருந்து பாதுகாப்பை வழங்குகின்ற குளிர் கண்ணாடிகளை தேர்ந்தெடுத்து அணிவது இன்றியமையாதது. அக்கண்ணாடிகளுள் மறைக்கப்பட்டுள்ள பவர் ஏதும் இருக்கக் கூடாது. சாத்தியமானால், எத்தகைய குளிர்க் கண்ணாடிகளைப் பயன்படுத்துவது என்பது குறித்து ஒரு கண் மருத்துவ நிபுணரிடம் பரிந்துரையைப் பெறுங்கள்.

நீச்சல்குளத்தில் குளிக்கும் போது நீரில் உள்ள குளோரின் போன்ற வேதிப்பொருட்களில் இருந்து உங்கள் கண்களைக் காக்க பாதுகாப்பு கண் கண்ணாடிகளை அணியவும்.

உலர்ந்த கண்களுக்காக மருந்தகங்களில் விற்பனை செய்யப்படும் ‘டியர்ஸ்’ ஐ பயன் படுத்துவதில் தவறில்லை. ஆனால், கண் மருத்துவ நிபுணர்களிடம் கலந்தாலோசித்து அவர்களது பரிந்துரையை பெற்றதற்குப் பிறகு மட்டுமே இதைப் பயன்படுத்த வேண்டும்.

சன் ஸ்ட்ரோக் என அழைக்கப்படும் வெப்பத் தாக்குதல் வழக்கமாக காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் நடக்கிறது. ஆகவே, முடிந்தவரை இந்த நேரங்களின்போது வெளியே பயணம் செய்வதை தவிர்க்கலாம்.

நீங்கள் வெளியே இருக்கும்போது தலை சுற்றல் உணர்வு இருக்குமானால், நிழல் உள்ள இடத்தைக் கண்டறிந்து 30 அல்லது அதற்கு அதிகமான நிமிடங்கள் வரை அங்கு காத்திருக்கவும். அப்போதும் அதே உணர்வு உங்களுக்கு இருக்குமானால், தண்ணீர் அருந்தவும். அதன்பிறகே உங்களது பயணத்தை நீங்கள் தொடர வேண்டும்.

சூரியஒளி மற்றும் வெப்பத்தின் பாதிப்பு பற்றி கூறினாலும் கூட, ஆரோக்கியமான உடல் மற்றும் மனதிற்கு சூரியக்கதிர்கள் நமக்கு அவசியமாக இருக்கின்றன. ஆகவே, சூரிய வெளிச்சத்தின் கீழ் ஒரு திறந்தவெளி சூழலில் விளையாட அல்லது நடைப்பயிற்சி மேற்கொள்வதை ஒரு வழக்கமாக ஆக்கிக்கொள்ளுங்கள். ஆனால், கோடைக்காலத்தின்போது பிற்பகல் 4 மணிக்கு பிறகு மட்டுமே இதை செய்ய வேண்டும். கான்டாக்ட் லென்ஸ்களை அணிபவர்கள் முடிந்த அளவிற்கு சூரியவெளிச்சத்திற்கு நேரடியாக வெளிப்படுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

உலர்ந்த கண்கள், சிவந்த கண்கள், கண் அழற்சி மற்றும் கண்ணிமைக் கட்டிகள் போன்றவை தற்காலிகமானதாக அல்லது பருவகால கண் பாதிப்புகளாக தோன்றக் கூடும்; ஆனால், நீண்டகாலம் நீடிக்கின்ற பாதிப்பு விளைவுகளுக்கு இவை வழிவகுக்கக் கூடும். நீண்டகால அடிப்படையில் இவைகள் விழித்திரையையும், கரு விழியையும் பாதிக்கக்கூடும். ஆகவே, இந்த பரிந்துரைகளுக்கு கவனமும், மதிப்பும் அளித்து அவைகளை கடைப்பிடிப்பது சிறந்தது.

தொடர்புக்கு:- 94449 64237

Tags:    

Similar News