செய்திகள்
கோப்புப்படம்

ஸ்பெயினை தாக்கிய பனிப்புயலுக்கு 4 பேர் பலி

Published On 2021-01-11 01:19 GMT   |   Update On 2021-01-11 01:19 GMT
ஸ்பெயினை தாக்கிய பனி புயல் காரணமாக இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாட்ரிட்:

ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. குறிப்பாக ஸ்பெயின் நாடு இந்த பனிப்பொழிவால் பெரும் பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் ஸ்பெயினை நேற்று முன்தினம் சக்தி வாய்ந்த பனிப்புயல் தாக்கியது. பிளோமினா என்று பெயரிடப்பட்ட இந்த புயல் தலைநகர் மாட்ரிட் மற்றும் ஸ்பெயினின் மத்திய பகுதிகளை புரட்டிப்போட்டது.

இந்தப் புயல் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிகப்பெரிய பனிப்பொழிவுக்கு வழிவகுத்தது. பனிப்பொழிவு காரணமாக சாலைகளில் வாகனங்கள் நகர முடியாமல் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் பல இடங்களில் சாலை போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் பனிப்புயல் காரணமாக மாட்ரிட்டில் உள்ள விமான நிலையம் மூடப்பட்டு விமான போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது. அதே போல் மாட்ரிட் உள்பட பல பகுதிகளில் ரெயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் புயல் காரணமாக கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்தப் பனி புயல் காரணமாக இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே இந்த கடுமையான பனிப்பொழிவு அடுத்த சில நாட்களுக்கு தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Tags:    

Similar News