செய்திகள்
வண்ணமயமான வாணவேடிக்கை

களைகட்டியது தீபாவளி... கொரோனா அச்சுறுத்தலை மறந்து பொதுமக்கள் உற்சாக கொண்டாட்டம்

Published On 2020-11-14 02:22 GMT   |   Update On 2020-11-14 02:22 GMT
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் அதிகாலை முதலே புத்தாடை அணிந்தும், பட்டாசுகளை வெடித்தும் உற்சாகமாக கொண்டாடுகின்றனர்.
சென்னை:

தீபத் திருநாளாம் தீபாவளி பண்டிகை இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அதிகாலையிலேயே தீபாவளி களைகட்டத் தொடங்கியது. காலையில் எழுந்து நீராடிவிட்டு பூஜைகள் செய்து, புத்தாடை அணிந்து குடும்பத்தினருடன் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். கோவில்களுக்கு சென்றும் பலர் வழிபாடு செய்கின்றனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர். 

கொரோனா அச்சுறுத்தல் ஒருபுறம் இருந்தாலும், கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார இருப்பு பொதுமக்களை கடுமையாக பாதித்துள்ளது. எனவே ஒருசில பகுதிகளில் பொதுமக்கள் எளிமையாக தீபாவளியை கொண்டாடுகின்றனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. பக்தர்கள் அதிகாலை முதலே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். கோவிலுக்குள் பக்தர்கள் தனி மனித இடைவெளியை கடைப்பிடிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும் பல்வேறு இடங்களில் தனிமனித இடைவெளியின்றி மக்கள் செல்வதை பார்க்கமுடிகிறது. 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நடைபெறும் மிகப்பெரிய பண்டிகை என்பதால் மக்கள் அதிக விழிப்புடன் பண்டிகையை கொண்டாடும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

நோய் பரவல் அதிகரிக்கும் என்பதால் பட்டாசுகளை வெடிக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் பல்வேறு இடங்களில் வழக்கமான அளவை விட குறைந்த அளவிலேயே மக்கள் பட்டாசுகளை வெடிக்கின்றனர். அதேசமயம் சென்னை போன்ற பெருநகரங்களில் மக்கள் வழக்கமான உற்சாகத்துடன் பட்டாசுகள் வெடித்து மகிழ்ந்தனர். கொரோனா அச்சுறுத்தலை மறந்து வழக்கமான உற்சாகத்துடன் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

உலகம் முழுவதிலும் வசிக்கும் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினரும் தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்கின்றனர். 
Tags:    

Similar News