செய்திகள்
கோப்புபடம்

மழைக்கால விபத்துக்களை தடுக்க பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் அறிவிப்பு

Published On 2021-11-23 07:25 GMT   |   Update On 2021-11-23 07:25 GMT
தொடர் மழையின் காரணமாக பள்ளியின் சுற்றுச்சுவர் மிகுந்த ஈரப்பதத்துடன் காணப்படலாம்.
திருப்பூர்:

அனைத்து பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களை மழைக்காலங்களில் ஏற்படும் விபத்துகளில் இருந்து பாதுகாக்க பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தொடக்க கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதுதிருப்பூர் உள்பட அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அடுத்து வரும் நாட்களில் தொடர்மழை எதிர்நோக்கப்படும் நிலையிலும், மாணவர்களின் பாதுகாப்பிற்கென ஆய்வு அலுவலர்களும், பள்ளி தலைமை ஆசிரியர்களும் கூடுதல் கவனம் செலுத்திடும் பொருட்டு அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.

குறிப்பாக தொடர் மழையின் காரணமாக பள்ளியின் சுற்றுச்சுவர் மிகுந்த ஈரப்பதத்துடன் காணப்படலாம். எனவே சுற்றுச்சுவரில் இருந்து 20 அடி தொலைவு வரை மாணவர்கள் செல்லாதவாறு கண்காணிக்க வேண்டும். மின் இணைப்புகள் சரியாக உள்ளனவா என்று அடிக்கடி பரிசோதிக்க வேண்டும். மின் கசிவு இருப்பின் இணைப்பை தற்காலிகமாக துண்டிக்க வேண்டும். 

விடுமுறை நாட்களில் ஏரி, குளம், மற்றும் ஆறுகளில் குளிப்பதை மாணவர்கள் தவிர்த்திட அறிவுறுத்த வேண்டும். குறிப்பாக நீர்நிலைகளுக்கு அருகே வேடிக்கை பார்க்க செல்லக்கூடாது.

ஆற்றில் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடும் வழியினை மழைக்காலங்களில் பள்ளிக்கு வரும் போதும், திரும்பி செல்லும் போதும் மாணவர்கள் பயன்படுத்துவதை தவிர்த்திட அறிவுறுத்த வேண்டும். பள்ளியில் உள்ள அனைத்து கட்டிடங்களின் மேற்கூரைகள் உறுதியாக உள்ளனவா என்று அவ்வப்போது ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

தேவைப்படும் நிகழ்வுகளில் மாவட்ட கலெக்டரை அணுகி பிரச்சினைகளை விளக்கி மாவட்ட நிர்வாகத்தின் உதவியோடு மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News