ஆன்மிகம்
திருச்சி நாகநாதசுவாமி கோவிலில் மாசி மக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய போது எடுத்த படம்.

திருச்சி நாகநாதசுவாமி கோவிலில் மாசிமக திருவிழா தொடங்கியது

Published On 2021-02-19 03:56 GMT   |   Update On 2021-02-19 03:56 GMT
திருச்சி நாகநாதசுவாமி கோவிலில் மாசிமக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 26-ந்தேதி நடைபெறுகிறது.
திருச்சி நந்தி கோவில் தெருவில் மலைக்கோட்டை கோவிலின் உப கோவிலான ஆனந்தவல்லி உடனுறை நாகநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் மாசி மக திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து நேற்று இரவு சுவாமி-அம்பாள் இந்திர விமான வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இன்று (வெள்ளிக்கிழமை) சுவாமி-அம்பாள் கற்பக விருட்சம், காமதேனு வாகனத்திலும், நாளை (சனிக்கிழமை) பூதவாகனம், கமல வாகனத்திலும், நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கைலாச பர்வதம் மற்றும் அன்ன வாகனத்திலும் எழுந்தருள்கிறார்கள்.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 26-ந்தேதி நடைபெறுகிறது. அன்று காலை 6.30 மணிக்கு மேல் 7 மணிக்குள் மீன லக்னத்தில் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. வருகிற 27-ந்தேதி மாசி மகத்தை ஒட்டி நடராஜர் தரிசனம், சிவகங்கை தீர்த்தம் கொடுத்தல் நிகழ்ச்சியும், காலை 11 மணிக்கு மேல் காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

வருகிற 28-ந்தேதி சுவாமி, அம்பாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளியுள்ள போது, நாக கன்னிகைகள், சாரமா முனிவர் நாகநாதரை செவ்வந்தி மலர்களால் அர்ச்சித்தல் நிகழ்ச்சியும், அதைதொடர்ந்து அன்று இரவு விடையாற்றி நிகழ்ச்சி நடைபெறுகிறது. வருகிற 1-ந் தேதி காலை சண்டிகேஸ்வரர் உற்சவம், மாலை பிச்சாண்டவர் திருக்கோலமும் நடைபெறுகிறது. 2-ந்தேதி கோவில் பணியாளர்கள் சார்பில் பிராயச்சித்தம் அபிஷேகத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் விஜயராணி, செயல் அலுவலர் கீதா உள்பட அலுவலகர்கள், பக்தர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News