செய்திகள்
நீதிபதி பானுமதி

சுப்ரீம் கோர்ட் கொலீஜியத்தில் தமிழக பெண் நீதிபதி பானுமதி நியமனம்

Published On 2019-11-18 07:31 GMT   |   Update On 2019-11-18 07:31 GMT
சுப்ரீம் கோர்ட் கொலீஜியத்தில் தமிழகத்தை சேர்ந்த பெண் நீதிபதி ஆர்.பானுமதி இடம் பெற்றுள்ளார்.

புதுடெல்லி:

சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியத்தில் பெண் நீதிபதியான ரூமாபால் இடம் பெற்றிருந்தார். அதில் 3 ஆண்டுகள் அங்கம் வகித்த பிறகு 2006-ம் ஆண்டு அவர் ஓய்வு பெற்றார்.

ரூமாபால் சுப்ரீம்கோர்ட்டில் நீண்ட காலம் பணியாற்றிய (6 ஆண்டுகள்) பெண் நீதிபதி என்ற பெருமை பெற்றவர்.

இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட் கொலீஜியத்தில் தமிழகத்தை சேர்ந்த பெண் நீதிபதி ஆர்.பானுமதி இடம் பெற்றுள்ளார். 13 ஆண்டுகளுக்கு பிறகு கொலீஜியத்தில் பெண் நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார்.

சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியத்தில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் ரமணா, அருண் மிஸ்ரா, ஆர்.எப்.நாரிமன் ஆகியோரோடு ஆர். பானுமதி இடம் பெற்று உள்ளார்.

அடுத்த ஆண்டு ஜூலை 19-ந் தேதியுடன் நீதிபதி பானுமதி ஓய்வு பெறுகிறார். இதனால் அவர் கொலீஜியத்தில் 9 மாதங்கள் மட்டுமே அங்கம் வகிப்பார்.

1955-ம் ஆண்டு ஜூலை 20-ந் தேதி பிறந்த அவர் 1988-ம் ஆண்டு மாவட்ட மற்றும் செசன்ஸ் நீதிபதியாக தனது நீதித்துறை பயணத்தை தொடங்கினார். 2003-ல் சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஆவதற்கு முன்பு அவர் ஜார்க்கண்ட் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக 2013-ம் ஆண்டு முதல் பொறுப்பு வகித்தார். 2014-ல் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

சுப்ரீம் கோர்ட்டில் தற்போது தலைமை நீதிபதி உள்பட 34 நீதிபதிகள் பணியில் உள்ளனர். இதில் 3 பேர் பெண்கள். நீதிபதி பானுமதியை தவிர இந்துமல்ஹோத்ரா, இந்திரா பானர்ஜி ஆகிய 2 பெண் நீதிபதிகள் உள்ளனர்.

சுப்ரீம் கோர்ட்டு வரலாற்றில் தற்போது வரை 8 பெண் நீதிபதிகள் மட்டுமே பணியாற்றி உள்ளனர்.

முன்னாள் நீதிபதிகளான பாத்திமா பீபி, சுஜாதா மனோகர், கியான் சுதா மிஸ்ரா, ரஞ்சன் தேசாய் ஆகியோர் 5 ஆண்டுகளுக்கு குறைவாக பணியாற்றி உள்ளனர்.

Tags:    

Similar News