செய்திகள்
மோசடி

கப்பலில் வேலை வாங்கி தருவதாக கொத்தனாரிடம் ரூ.13¼ லட்சம் மோசடி- 3 பேருக்கு வலைவீச்சு

Published On 2019-11-20 15:17 GMT   |   Update On 2019-11-20 15:17 GMT
தக்கலை அருகே கப்பலில் வேலை வாங்கி தருவதாக கூறி கொத்தனாரிடம் ரூ.13¼ லட்சம் மோசடி செய்த தம்பதி உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பத்மநாபபுரம்:

தக்கலை அருகே முத்தலக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ஜேம்ஸ்(வயது 45), கொத்தனார். இவருடைய மனைவி ஜான்சி ராணி(40). ஜேம்ஸ் கடந்த 2 ஆண்டுக்கு முன் அரபு நாட்டில் கொத்தனாராக வேலை செய்து வந்தார்.

ஜேம்ஸ் வீட்டின் அருகில் கண்ணாட்டுவிளையை சேர்ந்த ராமன்(75), இவருடைய மகன் அய்யப்பன்(35), மனைவி அமுதா (33) ஆகியோர் வசித்து வந்தனர். அமுதாவின் குடும்பத்தினர் ஜான்சி ராணியிடம் நட்புடன் பழகி வந்தனர்.

அப்போது அமுதா, தனது குடும்பத்தினர் பலரை கப்பல் வேலைக்கு வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், ஜேம்சுக்கும் ரூ.2 லட்சத்தில் வெளிநாட்டில் கப்பலில் வேலை வாங்கி தருவதாகவும் கூறினார். இதை உண்மை என நம்பிய ஜான்சி ராணி அதற்கு சம்மதித்தார். அதைத்தொடர்ந்து ஜான்சி ராணி கணவரை வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதற்காக ரூ.13 லட்சத்து 34 ஆயிரத்தை பல தவணைகளாக அமுதாவின் குடும்பத்தினரிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் ஜேம்ஸ், விடுமுறையில் ஊர் திரும்பினார். அதன்பிறகு பல மாதங்களாகியும் அமுதாவின் குடும்பத்தினர் ஜேம்சை வெளிநாட்டுக்கு அனுப்பவில்லை. இதனால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ஜேம்ஸ், அமுதா குடும்பத்தினரிடம் பணத்தை திருப்பிக்கேட்டார். அவர்களும் பணத்தை திருப்பி தருவதாக கூறினார்கள்.

இந்த நிலையில் சம்பவத்தன்று ஜேம்ஸ், அமுதாவின் வீட்டுக்கு சென்றார். அங்கு வீடு பூட்டப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அமுதா அவருடைய கணவர் அய்யப்பன் உள்பட 3 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News