செய்திகள்
சந்தையில் குவிந்துள்ள மாடுகளை படத்தில் காணலாம்.

மதகடிப்பட்டு வாரசந்தையில் பொங்கல் பொருட்கள் விற்பனை அமோகம்

Published On 2020-01-14 11:51 GMT   |   Update On 2020-01-14 11:51 GMT
பொங்கலை முன்னிட்டு மதகடிப்பட்டு வாரசந்தையில் பொங்கல் பொருட்களை அதிக அளவில் பொதுமக்கள் வாங்கி சென்றனர்.

திருபுவனை:

திருபுவனை அருகே மதகடிப்பட்டு மாட்டு சந்தை மற்றும் பல்பொருள் விற்பனை கடைகள் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும். தற்போது பொங்கலை முன்னிட்டு சிறப்பு போகி சந்தையும், வார சந்தையும் இந்த வருடம் ஒன்றாக வந்து பொதுமக்களிடையேயும், வியாபாரிகளிடத்திலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சந்தையில் பொதுமக்கள் அதிக அளவில் பொருட்களை வாங்கி சென்றனர்.

பல நூற்றாண்டுகளை கடந்து நடந்து வரும் இந்த மாட்டு சந்தையில் புதுவையில் உள்ள கிராமங்களில் இருந்தும் தமிழகம், கேரளா, ஆந்திரா கர்நாடகாவில் இருந்து மாடுகள் விற்பனைக்கு வருவது உண்டு. இதில் கறவை மற்றும் காளை மாடுகள், கன்றுக்குட்டிகள் என வாரந்தோறும் 500-க்கும் மேற்பட்ட மாடுகளை விற்பனை செய்வார்கள் , இதனால் மாடுகளை விலைபேசி வாங்கி கொடுக்கும் புரோக்கர்களுக்கும் அதிக மரியாதை உண்டு.

மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த மாட்டு சந்தையில் தற்போது மாட்டுப்பொங்கலை கொண்டாடும் வகையில் மாட்டிற்கு தேவையான வர்ணங்கள், மூக்கணாங் கயிறு, சாரடஅடை, கொண்டை, சலங்கை, கழுத்து சங்கு என பல்வேறு பொருட்களும் குவிக்கப்பட்டு விற்பனை நடைபெற்றது.

மேலும் பொதுமக்கள் பொங்கலுக்கு பயன்படுத்தும் கரும்பு, மஞ்சள், புதிய பானைகள் பச்சரிசி, வெல்லம் என பொங்கல் பொருட்கள், பழ வகைகள், காய்கறிகள், கீரை வகைகள், பருப்பு வகைகள், புளி மளிகை பொருட்கள் துணி வகைகள் வீட்டுக்கு தேவையான கத்தி, அரிவாள், அம்மிகற்கள் போன்றவற்றை அதிக அளவில் பொதுமக்கள் வாங்கி சென்றனர். தற்போது சண்டை சேவல்களும் சந்தைக்கு விற்பனைக்கு வந்துள்ளதால் அதனை இளைஞர்கள் அதிக அளவில் வாங்கி சென்றனர்.

Tags:    

Similar News